பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலக மாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் முஷாரஃப்பின் செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேஷி, அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று கூறினார்.
கடந்த 1999ஆம் ஆண்டும் அந்நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரஃப், கடந்த ஆண்டு ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகினார்.
இதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன.
இதற்கிடையில், அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப்பை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை விரைவில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ளதால், அதற்கு முன்பாகவே முஷாரஃப் தானாக முன்வந்து பதவியில் இருந்து விலகுவார் எனக் கூறப்பட்ட நிலையில், முஷாரஃப்பின் செய்தித் தொடர்பாளர் இன்று அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.