பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி கட்சிகளால் பதவி நீக்கம் செய்யப்படும் முன் அதிபர் முஷாரஃப் தாமாக முன்வந்து பதவி விலகுவது நல்லது என பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிபர் பதவியில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என அதிபர் முஷாரஃப்பிடம் ராணுவத் தளபதி கிலானி வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
பதவி நீக்கத் தீர்மானத்திற்கு எதிராக போராடுவது பயனளிக்காது என முஷாரஃப்பிடம் இன்னும் ஓரிரு நாட்களில் ராணுவத் தலைமை வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டு அரசியல் முடிவுகளில் தலையிடாது என்று இங்கிலாந்து நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ள முன்னாள் ராணுவ அதிகாரி, ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிபர் முஷாரஃப் தாமாக முன்வந்து பதவியில் இருந்து விலகுவதன் மூலம் ராணுவத்தின் கவுரவத்தையும் காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.