பாகிஸ்தானை தாக்க தற்கொலைப்படை தயார்: தலிபான்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:46 IST)
பாகிஸ்தானின் உள்ள ஸ்வாட், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்தாவிட்டால், கராச்சி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் மிகக் கோரமான தற்கொலை‌‌த் தா‌க்குத‌ல் நடத்தப்படும் என தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மௌலாவி ஓமர், நேட்டோ படைகள், ஆஃப்கான் தேசிய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் விமானங்களை தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார்.

பாக்.-ஆஃப்கான் எல்லைப்பகுதியில் அரசின் அமைதி முயற்சிகளுக்கு தலிபான்கள் ஒத்துழைப்பு அளித்ததாக சுட்டிக்காட்டிய அவர், எனினும் தங்களின் கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசும், வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசும் பூர்த்தி செய்யவில்லை எனக் குற்றம்சா‌ற்‌றினார்.

அமெரிக்க ஆதிக்கக் கொள்கைகளையே அதிபர் முஷாரஃப்பின் கொள்கைகள் பிரதிபலிப்பதாகவும், ஸ்வாட், எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதை பாகிஸ்தான் அரசு உடனடியாக நிறுத்தாவிட்டால், தலிபான் அமைப்பின் சிறுவர், சிறுமியர்களை கொண்டு பெரும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்