மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவுடன் இந்திய தூதர் சந்திப்பு!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (17:01 IST)
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவுடன் நேபாளத்துக்கான இந்திய தூதர் ராகேஷ் சூட் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
மாவோயிஸ்ட் தங்கள் கட்சி தலைமையில் நேபாளத்தில் அரசு அமைக்க முயற்சி செய்து வரும் வேளையில், நயா பஜாரில் உள்ள பிரசண்டாவின் இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் அரசு அமைக்க எடுத்து வரும் முயற்சிகள் பற்றி பிரசண்டா அப்போது இந்திய தூதரிடம் தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த இந்திய தூதர், தேசிய அளவில் ஒருமித்த ஆதரவுடன் அரசு அமைக்குமாறு ஆலோசனை கூறினார்.
நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இன்னும் புதிய அரசு அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டின் 601 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபையில், 227 உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக மாவோயிஸ்ட் திகழ்கிறது. பெரும்பான்மையைப்பெற அக்கட்சிக்கு இன்னும் 73 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் மாவோயிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராம் பரதன் யாதவால் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.