தமிழக மீனவர் பிரச்சனை: விசாரணைக்கு சிறிலங்க அரசு உத்தரவு!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (14:32 IST)
தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பிரச்சனையை பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் நேற்று நடந்த சந்திப்பில் எழுப்பியதைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்த சிறிலங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
PIB
கொழும்பில் இன்று துவங்கும் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சிறிலங்கா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், நேற்று மாலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்திய- சிறிலங்க கடல் எல்லைக்கு அருகே மீன்பிடி பணியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர், தமிழக மீனவர்களிடம் சிறிலங்க கடற்படை மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சமீபத்தில் சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு தமிழக மீனவர்கள் உயிரிழந்த பிரச்சனை குறித்து விசாரிக்க சிறிலங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.