பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டு நேரத்தை மாற்றியமைத்துள்ளது.
அதாவது 8 மணி இனி மேல் 9 மணியாகக் கருதப்படும் என அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து அமலுக்கு வந்தது. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையால் திங்கள்கிழமை நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திங்கள்கிழமை அன்று அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் நேரம் மாற்றப்பட்டதை மறந்து வழக்கப்படிச் சென்றனர். இதனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றடைந்தனர்.
இதனிடையே, நேரமாற்றம் குறித்தத் தகவலை மக்கள் மத்தியில் அரசு சரியாகக் கொண்டுபோய் சேர்க்கவில்லை என்றும் பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.