நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் சென்ற 6 இந்தியர்கள் பலி!
திங்கள், 12 மே 2008 (13:38 IST)
இந்தியக் கணினிப் பொறியாளர்களையும் அவர்களின் மனைவிகளையும் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற வேன் மேற்கு பென்சில்வேனியாவில் விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
பென்சில்வேனியா- ஒகியோ எல்லையில் இருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டதாகவும், நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரை வேன் கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் வேகமாக மோதியதில் இரண்டு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் வேன் ஓட்டுநர் கெளசிக் தேவ் (26), மனோஜ் ஜஹரியா (35), அவரின் மனைவி மிலி ஜஹரியா (28), நிதின் அகர்வால் (29), அவரின் மனைவி ஸ்வாதி அகர்வால் (25), சுபம் செளத்ரி (24) ஆகியோர் உயிரிழந்தனர்.
மற்றொரு இந்தியரான நிதின் குப்தா (28) மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கணினி நிறுவனங்களில் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.