பாகிஸ்தான் பிரதமராக கிலானி இன்று தேர்வு!
திங்கள், 24 மார்ச் 2008 (14:03 IST)
பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் மக்தூம் யூசுப் ராசா கிலானி இன்று தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் துணைத் தலைவர் மக்தூம் யூசுஃப் ராசா கிலானி, நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அதேபோல, அதிபர் முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) கட்சி கூட்டணி சார்பில், பஞ்சாப் மாகாண முன்னாள் முதலமைச்சர் செளத்ரி பர்வைஸ் இலாகி பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டின் தேசியச் சட்டப்பேரவை இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
தற்போது 342 உறுப்பினர்களைக் கொண்ட தேசியச் சட்டப் பேரவையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளதால் கிலானி பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர் கிலானிக்கு முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), கட்சி, அவாமி தேசிய கட்சி, உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக கிலானி நாளை பதவியேற்கிறார். அவருக்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.