பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. இதனிடையே பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 42 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தல் நாளை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக ஆற்றிய அவரது உரை பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டது.
நவாஸ் ஷெரீப்பும், பெனாசிரின் கணவர் ஜர்தாரியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றால் இந்த இரு கட்சியினரும் கூட்டாக போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. முஷாரப் ஆதரவு பெற்ற ஆளுங்கட்சிக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வன்முறைகள் அரங்கேறினால் அதனை அரசு சகித்துக் கொள்ளாது என்று அவர் எச்சரித்துள்ளார். ஆயினும் தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுமா? என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுகிறது.
தற்கொலை படை தாக்குதலில் 42 பேர் பலி
இதனிடையே பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பராசினாரில் உள்ள பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். 90க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.