பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் ஓய்கிறது!
சனி, 16 பிப்ரவரி 2008 (15:17 IST)
பாகிஸ்தானில் வரும் திங்கட் கிழமை நடைபெற உள்ள 9வது பொதுத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
நாடு முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கட்சிகளின் கொடிகளும், தோரணங்களும், கொள்கை விளக்க போர்டுகளும் காணப்படுகின்றது. அந்நாட்டு அயலுறவுத் தறை அமைச்சகம் அயல்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மாகாணங்களில் உள்ள அனைத்து சாவடிகளுக்கும் வாக்கு சீட்டுகளும், அழியாத மையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் இராணுவம் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலில் பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்.
இத்தேர்தலுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை பாகிஸ்தான் அரசு செலவு செய்ய உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவரும் தற்போதைய அரசியல் வாதியுமான இம்ரான்கானின் முன்னாள் மனைவி ஜெமிமா இன்று அதிபர் முஷாஃப்பை சந்தித்து பேசினார்.
இங்கிலாந்து நாளிதழ் ஒன்றிற்காக அதிபர் முஷாரஃப்பிடம் பேட்டி எடுத்தபோது, பாகிஸ்தானில் நேர்மையாகவும் நியாயமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜெமிமாவிடம் அதிபர் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இத்தேர்தலை இம்ரான்கான் கட்சி புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.