இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார்- அமெரிக்கா!
புதன், 13 பிப்ரவரி 2008 (18:23 IST)
அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதற்காக, அவ்விடயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ, "அணுசக்தி சுற்றுச் சூழலுக்கும் உகந்தது என்பதுடன், வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தேவையான மின்சாரத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கும் உதவும். இதனால் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
"சுற்றுச்சூழல் பிரச்சனைகளைச் சந்திப்பதற்காக அணுசக்தியை நாங்கள் ஊக்கப்படுத்துவோம். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தியாவுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்துவோம். இதற்காக இந்தியா எடுக்கும் முயற்சிகளில் இணைந்து செயல்படவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்றும் அவர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியாவுடன் அண்மையில் ஏதாவது பேச்சு நடத்தினாரா என்று கேட்டதற்கு, அவர் பேசவில்லை, அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தொடர்ந்து பேசி வருகிறது என்றார் டானா பெரினோ.