சிறிலங்காவில் 15 வது சார்க் மாநாடு!
செவ்வாய், 29 ஜனவரி 2008 (16:20 IST)
தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) 15 வது மாநாடு சிறிலங்காவில் வருகிற ஜூலை 27 ஆம் தேதி துவங்குவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை நடக்கவுள்ள இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் சார்பில் 1,000 பிரதிநிதிகளும், சுமார் 300 மூத்த ஊடகவியலாளர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் தங்கவிருக்கும் கொழும்பு விடுதிகளிலும், மாநாடு நடக்கவுள்ள கண்டி நகரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, போக்குவரத்து வசதிகள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்கள் பற்றியும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. கொழும்பில் இருந்து கண்டி வரை சுமார் 80 கி.மீ. தொலைவிற்குப் புதிதாக சாலை அமைக்கும் பணிகளும் நடக்க உள்ளன.
முன்னதாக, மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்து சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கண்டியில் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், அயலுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா, மகிந்தானந்த அலுத்காமகே, ரோஹன திசநாயகே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.