முறைகேடற்ற பொதுத் தேர்தல்: அமெரிக்காவிடம் ஜர்தாரி கோரிக்கை!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (11:39 IST)
பாகிஸ்தானில் முறைகேடற்ற பொதுத் தேர்தல் நடப்பதை அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துமாறு, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான ஆஷிப் அலி ஜர்தாரி வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு, அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைசிடம் அவர் அளித்த கடிதத்தில் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
"பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத் தேர்தலை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் பாகிஸ்தானின் எல்லாப் பகுதிகளுக்கும் தடையில்லாமல் சென்று வாக்குப் பதிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மீது நீடிக்கும் தடைகளை உடனடியாக நீக்குமாறும், முறைகேடற்ற தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பை அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்." என்று ஜர்தாரி கூறியுள்ளார்.