அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'குழு வன்முறை' காரணமல்ல என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான அபிஜீத் மஹாடோ (29) அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டத்திற்க்கான ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். பல்கலைக் கழக வளாகத்திலேயே உள்ள அவரது அறையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது நண்பர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு மஹாடோவின் உடல் இன்று ஜார்கண்ட்டில் உள்ள அவரது சோந்த ஊருக்கு கொண்டுவரப்பட உள்ளது.
அவரது உடலை பெற்று இந்தியாவுக்கு அனுப்புவதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் பல்கலைக்கழகம் விரைந்துள்ளனர். 'இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துப்பறிவு துறையினர் நடத்திய ஆய்வில் சில தகவல்கள் கிடைத்துள்ளன' என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஜோஸ் லோபஸ் கூறுகையில், "இந்த கொலை சம்பவம் குழு வன்முறையால் நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்திலேயே மஹாடோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.