ஹிண்ட்ராஃப் தலைவர்கள் சிறையில் உண்ணாவிரதம்!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:50 IST)
மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்குச் சமஉரிமை கோரிக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து அப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹிண்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகளான பி.உதயகுமார், வி.கணபதிராவ், டி.வசந்தகுமார், ஆர்.கங்காதரன், எம்.மனோகரன் ஆகிய 5 பேர், டிசம்பர் 13 ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தற்போது தாய்பிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரும் தங்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து வருகிற ஞாயிறு முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அன்று முதல் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க உள்ளதாகவும் அவர்களின் வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி 5 பேரையும் எந்தவித விசாரணையும் இன்றி 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.