இந்திய-சீன எல்லைப் பேச்சில் முன்னேற்றம்: சீனா நம்பிக்கை!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:10 IST)
இந்தியாவுடன் நடந்துவரும் எல்லைப் பேச்சில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இச்சிக்கலில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வெளிப்படையான தீர்வு மிக விரைவில் உருவாக வேண்டும் என்றும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த வாரம் சீனா செல்லவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீன அயலுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ கூறியதாவது:
இந்தியா சீனா இடையே சாதகமான அரசியல் உறவுகள் ஏற்பட வேண்டும் என்று, எல்லைப் பேச்சின் போது இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளன. எல்லைப் பிரச்சனை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
எல்லைப் பேச்சில் வளர்ச்சிக்குரிய முன்னேற்றங்கள் எற்படும் என்றும், இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வெளிப்படையான தீர்வு விரைவில் உருவாக வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
இதுவரை நடந்துள்ள எல்லைப் பேச்சுகள் முக்கியமான கட்டங்களைக் கடந்து மேம்பட்ட நிலையை அடைந்துள்ளன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பயணத்தினால், இருநாடுகளுக்கும் இடையில் உள்ள பாரம்பரியம் மிக்க உறவுகள் இன்னும் வலுப்பெறுவதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பும் மேம்படும்.
மன்மோகன் சிங் ஜனவரி 14 ஆம் தேதி சீன பிரதமர் வென் ஜியாபாவோவைச் சந்திக்கிறார். 15 ஆம் தேதி சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவைச் சந்திக்கிறார். பின்னர், சீனாவில் முன்னிலை வகிக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.