மலேசிய இந்தியர் பிரச்சனைகள் கவனிக்கப்படும் : அப்துல்லா பதாவி உறுதி!

சனி, 15 டிசம்பர் 2007 (16:39 IST)
மலேசிய இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மலேசிய அரசு கவனிக்கும் என்றும் தன்னைச் சந்தித்த மலேசிய இந்தியக் குழுவினரிடம் அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது பதாவி உறுதியளித்துள்ளார்!

மலேசிய பொருளாதாரத்திலும், சமூக வாழ்விலும் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், தங்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்று கோரி மலேசிய இந்து உரிமை முன்னணி (ஹின்ட்ர·ப்) குரல் கொடுத்தது.

தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்த முயன்ற மலேசிய இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதை அடுத்து, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை உலக நாடுகளின் பார்வைக்கு வந்தது.

மலேசிய இந்தியர்கள் பிரச்சனையில் மலேசிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியதையடுத்து, மலேசிய இந்திய சமுதாயத் தலைவர்களை பிரதமர் அப்துல்லா பதாவி சந்தித்துப் பேசினார்.

மலேசிய இந்து பேரவையின் தலைவர் ஆர். நடராஜா தலைமையில் மலேசிய இந்தியர்களின் 14 அரசுசாரா அமைப்பினர் இன்று பிரதமர் பதாவியைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய இந்து பேரவைத் தலைவர் ஆர். நடராஜா, மலேசிய இந்தியர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் அரசு கவனத்தில் கொண்டு ஆராயும் என்று உறுதியளித்ததாகக் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சாமிவேலு, மலேயசிய நாட்டின் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

கல்வி, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துதுறைகளிலும் இந்தியர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நாங்கள் எடுத்து வைத்ததாகவும், அதனை பிரதமர் முழுமையாகக் கேட்டுக் கொண்டதாகவும் நடராஜா கூறியுள்ளார்.

மலேசிய இந்தியர்களின் உரிமைகளை எழுப்பிய ஹின்ட்ர·ப் தலைவர்கள் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்த மலேசிய அரசு, மறுபக்கம் மலேசிய இந்தியர் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்