பாகிஸ்தானில் அவசர நிலை இரத்து!
சனி, 15 டிசம்பர் 2007 (16:06 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடணம் அகற்றப்பட்டு 1973 -ம் ஆண்டு அடிப்படையிலான அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களுடன், அரசியல் அமைப்புச் சட்ட நடைமுறை இன்று பிற்பகல் முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 3 -ம் தேதி அவசர நிலையை அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பிறப்பித்தார். இதன் அடிப்படையில் மக்களின் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. செய்தி, ஊடகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும், காமன்வெல்த் கூட்டமைப்பும் பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்தன. இராணுவ தளபதி பொறுப்பைத் முஷாரஃப் துறக்க வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, அவசரநிலை பிரகடணத்தை ரத்து செய்துவிட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தினை கொண்டு வருவது, செய்தி, ஊடகங்கள் மீதான தடையை அகற்றுவது, திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முஷாரஃப் இராணுவ தளபதி பொறுப்பில் சில நாட்களுக்கு முன்பு விலகியதோடு வரும் 15 -ம் தேதி அவசரநிலை பிரகடணம் இரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று அதற்கான கோப்பில் மதியம் 1 மணிக்கு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கையெழுத்திட்டார். இதனையடுத்து கடந்த 42 நாட்களாக அந்நாட்டில் நீடித்து வந்த அவசர நிலைக்கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 1973 ஆம் ஆண்டைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அவசரநிலை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் முஷாரப் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு வானொலி, தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது தோகர்க்கு அதிபர் முஷாரஃப் பிற்பகல் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார். அதனைத் தொடர்ந்து மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமைநீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அரசு வழக்கறிஞர் மாலிக் கியூம் கூறியுள்ளார். அவசர நிலை பிரகடணத்தின் போது முடக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகளான 9, 10, 15, 16, 17, 19, 25 ஆகியவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.