சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் அந்நாட்டை சேர்ந்த 23 வயதான ஜாங் ஜிலின் வெற்றி பெற்றுள்ளார்.
ஆண்டு தோறும் நடத்தப்படும் உலக அழகிப்போட்டி வரிசையில் 57வது போட்டி சீனாவில் சானியா நகரில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 106 அழகிகள் இதில் பங்கேற்றனர். எஸ்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக எய்ட்ஸ் தினத்தன்று இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சீன நாட்டை சேர்ந்த 23 வயதான ஜாங் ஜிலின் மகுடத்தை வென்றார். போட்டி நடைபெற்ற அரங்கம் நிரம்பி வழிந்தது. 300 டாலர் டிக்கெட் கொடுத்து இதனை காண பெருந்திரளமான மக்கள் வந்திருந்தனர். தங்களது நாட்டை சேர்ந்த ஜாங் ஜிலின் மிஸ்வேர்ல்டு பட்டம் வென்றதை அவர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
அரங்கத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து இந்த வெற்றியை அவர்கள் கொண்டாடினர். மிஸ் ஜங்கோலா 2-வது இடத்தையும், மிஸ் மெக்சிகோ 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்திய அழகி சாரா ஜேன் தியாஸ் உட்பட 106 பேர் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றனர். எனினும் சாரா ஜேன் தியாஸ் அரையிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார்.
சீனப் பெண் ஒருவர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.