முஷாரஃப் பதிலை அமெரிக்கா நிராகரித்தது!
Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (15:47 IST)
'பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருப்பது அவசியம்’ என்ற அதிபர் முஷாரஃப்பின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது, அவசரநிலையை ரத்து செய்துவிட்டு வெளிப்படையான சுதந்திரமான பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தவோம் என்றுஅமெரிக்கா கூறியுள்ளது.
அதிகரித்துவரும் பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்தி, வெளிப்படையான பொதுத் தேர்தலை நடத்த அவசர நிலை அமலில் இருப்பது அவசியம் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அயலுறவுஅமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷான் மெக்கார்மக், ''பொதுத் தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்கு அவசர நிலை அமலில் இருப்பது அவசியம் என்று முஷாரஃப் கூறுவதன் பொருள் எங்களுக்குப் புரிகிறது. அதே நேரத்தில் எங்களின் கருத்து வேறுமாதிரியாக உள்ளது. அவசர நிலை அமலில் உள்ளபோது வெளிப்படையான தேர்தலை நடத்த முடியும் என்று எங்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை'' என்றார்.
அவசர நிலை அமலில் இருந்தால் பயங்கரவாதிகளையும், மனித வெடிகுண்டுகளையும் எளிதில் கட்டுப்படுத்தி விடுவோம் என்று முஷாரஃப் கூறியிருப்பதையும் மெக்கார்மக் நிராகரித்தார்.
''அவசர நிலை உள்ளதோ இல்லையோ, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளது. அவர்களை அச்சுறுத்தும் அதே பயங்கரவாதிகள்தான் எங்களையும் அச்சுறுத்துகின்றனர். பாகிஸ்தானின் அண்டை நாடுகளையும் அச்சுறுத்துகின்றனர். எனவே அங்கு வேறு ஏதோ நடக்கிறது'' என்றார் மெக்கார்மக்.