பாகிஸ்தானில் கடந்த 3ஆம் தேதி அதிபர் முஷாரப் அவசர நிலை பிரகடனப்படுத்தினார். இதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகளும், நீதிபதிகள், வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகளும் நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வருமாறு வலியுறுத்தி வருகின்றன.
வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் காவல்துறையினரால் அடித்து உதைக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முஷாரப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் பெனாசிர் களத்தில் இறங்கி உள்ளார். அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துகிறார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சிக்கும் அவர் அழைப்பு விடுத்ததோடு, அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவரையும் சந்தித்து பேசினார். அரசியல் கட்சியினரை ஒன்று திரட்டுவதற்காக கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் வந்தார். அப்போது அவர் கூறுகையில், "நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களை இணைத்து கொண்டு பாகிஸ்தானை காப்பாற்ற முன்வாருங்கள் என்று அழைக்கிறேன். முஷாரப்பின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை. பாகிஸ்தானில் தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சி மலரச் செய்ய வேண்டும். பாராளுமன்றத்தை எங்கள் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துவிட்டு பாராளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் நேற்று பெனாசிர் ஆலோசனை நடத்தினார். இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த கூட்டத்தில் 13 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த புதிய கூட்டணிக்கு `ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும் கூட்டணி' (ஏ.ஆர்.டி.) என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு, `பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை ரத்து செய்ய அதிபர் முஷாரப்புக்கு `கெடு' விதித்து தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், அவசர நிலையை ரத்து செய்ய கோரி, வரும் 13-ஆம் தேதி லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது. அதில் அனைத்து எதிர்க்கட்சியினர், பொது மக்கள் கலந்து கொள்வார்கள். இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் 9ஆம் தேதி (நாளை) கூடுகிறது. அதன் பிறகு லாகூர் நோக்கி செல்வோம் என்றார்.