ராவல்பிண்டியில் 11 மனித வெடிகுண்டுகள் ஊடுருவல் : உளவுத்துறை தகவல்!
Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (16:59 IST)
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகியவற்றில் 11 மனிதவெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளனர் என்றும், அவர்கள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் ஸ்வாத் பகுதியில் தாலிபான் ஆதரவுத் தீவிரவாதிகளின் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கப் போவதாகத் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
''இஸ்லாமாபாத்திற்குள் 3 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 6 மனிதவெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் அந்த பயங்கரவாதிகளைப் பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை'' என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே லால் மசூதி விவகாரத்தில் ஊடுருவிய 10 பேரில் 5 மனிதவெடிகுண்டுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தாக்குதலுக்குக் காத்துக்கொண்டுள்ளனர்.
ராவல்பிண்டியில் நேற்று தாக்குதல் நடத்திய மனிதவெடிகுண்டுடன் வந்த ஒருவர் தப்பிவிட்டார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேறுவேறு இடங்களில் பதுங்கியிருக்கும் இவர்கள் 11 பேரும் இணைந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை கூறியுள்ளது.
எனவே இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள், ரயில்கள் போன்ற போக்குவரத்து வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பயணிக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.