அணுசக்தி தொடர்பாக இந்தியாவின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் நிலையில், நியூட்ரான் அதிவேக அணு உலைகளை அமைப்பதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளதாக ரஷ்ய அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிவேக நியூட்ரான் அணு உலைகளை இணைந்து உருவாக்குவது எங்களது பிரதான நோக்கம் என்றும், இந்தியா இந்த வகையான அணு உலைகளை அமைப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் இத்துறையில் சர்வதேச அளவில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளதாக மேலும் அவர் கூறினார்.
அணுசக்தி தொடர்பான மேம்பாட்டுப் பணிகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறினார்,
இந்தியா தற்போது அணுசக்தி உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான கன-நீர் உலைகளை தயாரிக்க தொடங்கியுள்ள நிலையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மேற்கண்ட திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.
ரஷ்யாவின் வி.வி.இ.ஆர். உலைகளைப் போன்ற நீர் அழுத்த உலைகளை இந்தியா இன்னும் உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும், இத்துறையில் இணைந்து செயல்பட நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
வளரும் நாடான இந்தியாவில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான யுனேனியம் போதுமான அளவில் இல்லாத நிலையில் ரஷ்யா அதனை வழங்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய நிலையில் கூடன்குளம் அணுசக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் பணிகளில் மட்டும் தான் இந்தியா - ரஷ்யா இணைந்து செயல்பட்டு வருவதாகவும் இந்தியா மீதான தடையை சர்வதேச அணுசக்தி கழகம் விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் யுரேனியம் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் பெலோயாசெக் அணு உலை அதிவேக நியூட்டான் அணு உலையாகும். இது கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.