வியட்நாமில் மழை வெள்ளம் : ஒரு லட்சம் வீடுகள் சேதம்!
Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:21 IST)
மத்திய வியட்நாமில் பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் ஒரு லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 பேர் இறந்துள்ளனர் என்றும் 6 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை மத்திய வியட்னாமைச் சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 80,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 77,000 வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
நேற்று மட்டும் 21,630 பேர் காவல்துறையின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில் இளைஞர் ஒருவர் உட்பட 10 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். மேலும் 6 பேரைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காற்று, வெள்ளத்தால் 7,000 ஹெக்டேர் பரப்பிலான நெல், 29,000 ஹெக்டேர் அளவிலான மற்ற பயிர்கள் நாசமடைந்துள்ளன என்று அரசு தெரிவித்துள்ளது. சேதமதிப்பு 4.1 கோடி டாலர் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.