சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் ஆபத்தான கட்டத்தினை அடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்ற போதும், சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை தள்ளிவைக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, சிறிலங்கா அரசிற்கு எதிரான தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமை சபையிலும், பிரஸ்செல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அடுத்த மாதம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் பயணத்திற்குப் பிறகு அதனை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான போர்ச்சுக்கல் தீர்மானித்துள்ளது. ஆர்பரின் பயணத்தில் ஏற்படும் விளைவுகள் வரை காத்திருப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது என்றார்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசின் வற்புறுத்தல் காரணமாக , ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டுவரவிருந்த தீர்மானத்தை மூன்று தடவை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆர்பரின் சிறிலங்கா பயணத்தைத் தொடர்ந்து ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியான பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.