கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 14 பேர் பலி!

Webdunia

செவ்வாய், 24 ஜூலை 2007 (16:52 IST)
இலங்கையில் சிறிலங்க ராணுவத்தினர் சென்ற பேருந்தைக் குறிவைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 14 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயமுற்றனர்!

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னாரில் இருந்து மதவாச்சி என்ற இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சிறிலங்க ராணுவத்தினரின் பேருந்து வவுனியா மாவட்டம் சிட்டிகுளத்தைக் கடந்து கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலிற்கு உள்ளான அந்தப் பேருந்தில் சிறிலங்க ராணுவத்தினர் 30 பேர் இருந்ததாகவும், கொல்லப்பட்டவர்கள் தவிர மேலும் 7 பேர் படுகாயமுற்றதாகவும் புதினம் செய்தி கூறுகிறது.

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் வகை கண்ணி வெடியை பயன்படுத்தி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா மாவட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்ததாகவும் புதினம் செய்தி தெரிவிக்கிறது.

இத்தாக்குதலை சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. ஆனால் 9 ராணுவத்தினர் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்