அணுசக்தி ஒப்பந்தம் : பர்ன்ஸ் டெல்லி வருகை

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் 123 ஒப்பந்தத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அயலுறவுத் துறையின் தெற்காசிய விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் இன்று டெல்லி வருகிறார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் துணை பேச்சாளர் டாம்கேசி இதனை உறுதி செய்தார்.

அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டா லீசா ரைஸடன் இஸ்ரேல் சென்றிருந்த நிக்கோலாஸ் பர்ன்ஸ் அங்கிருந்து இன்று டெல்லிக்கு புறப்படுவதாக கேசி கூறினார்.

123 ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இன்னமும் பல வேறுபாடுகள் நிலவுவதாக தெரிவித்த கேசி ஆனால் அவைகளனைத்தும் சமன்படுத்தக்கூடியவையே என்று கூறினார்.

123 ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் பர்ன்ஸின் இந்தப் பயணத்தில் ஒப்பந்தத்திற்கான உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்று தன்னால் உறுதி கூறமுடியாது என்றும் கேசி கூறியுள்ளார்.

123 ஒப்பந்தம் உறுதியாவது இரு நாடுகளுக்குமே உகந்தது என்றும் அது சர்வதேச அணுசக்தி முகமையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் கேசி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்