உலக வங்கி தலைவர் வோல்ஃபோவிட்ஸ் பதவி விலகல்!

தனது காதலிக்கு அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் அதிகபட்ச ஊதியத்திற்கு பணியமர்த்தியது தொடர்பான சர்ச்சையை அடுத்து உலக வங்கியின் தலைவர் பால் வோல்ஃபோவிட்ஸ் பதவி விலகினார்!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைச் செயலராகப் பணியாற்றிய வோல்ஃபோவிட்ஸ், ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை நியாயப்படுத்தியதையடுத்து புஷ் நிர்வாகத்தின் செல்வாக்கால் உலக வங்கியின் தலைவரானார்.

உலக வங்கியின் தலைவரானதற்குப் பிறகும் அமெரிக்க நிர்வாகத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, உலக வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த தனது காதலியான ஷாஹா அலி ரிசாவிற்கு அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் பணி வாய்ப்பை பெற்றுத் தந்தார். வருடத்திற்கு வருமான வரியற்ற 1,94,000 டாலர் ஊதியத்திற்கு அந்தப் பணியை பெற்றுத் தந்தது பெரும் சர்ச்சையானது.

உலக வங்கியின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வோல்ஃபோவிட்ஸ் பதவி விலக வேண்டும் என்று ஒருமித்து அழுத்தம் தந்ததையடுத்து பதவி விலக முடிவு செய்துள்ளார்.

தனது பதவி விலகலை உலக வங்கியின் இயக்குநர்களுக்குத் தெரிவித்த வோல்ஃபோவிட்ஸ் ஜூன் 30 ஆம் தேதி வரை அப்பதவியில் நீடிப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்