பிரணாப் முகர்ஜியின் வெற்றிப் பயணம்..

வியாழன், 29 ஜனவரி 2009 (19:00 IST)
தனது இலங்கைப் பயணத்தை 'வெற்றிகரமாக' முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தலைநகரில் செய்தியாளர்களுக்கு அளிக்கும் (கற்பனை) பேட்டி...

உங்களின் இலங்கைப் பயணம் எப்படியிருந்தது?

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வதைப் போல், இந்த பயணம் அவ்வளவு சுகமாக இல்லை. ஆனாலும், சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு போகும் போது ஏற்படும் கசப்பான அனுபவங்களைவிட, இலங்கைப் பயணம் எவ்வளவோ மேல்.

அதில்லை..தமிழர்கள் பிரச்னை பற்றி அங்கு பேசினீர்களா?

ஆமாம்.. தமிழக அரசியல்வாதிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கொடுத்து வரும் பிரச்னைகள் பற்றி ராஜபக்சேவிடம் பேசினேன். மத்திய அரசுக்கு தலைவலி ஏற்படாதபடி, வெளிப்படையாக தமிழர்களைப் கொல்ல வேண்டாம் என்று கண்டிப்போடு கூறிவிட்டேன்.

அதற்கு அவரும் பெருந்தன்மையோடு உடனே சம்மதம் தெரிவித்தார். இதுவே தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதானே.

இலங்கையின் அணுகுமுறையில் மாற்றமுள்ளதா?

நிச்சயமாக இல்லை. கடந்த முறை எப்படி விருந்தோம்பல் செய்தார்களோ அதேபோல் இப்போதும் அன்போடு அவர்கள் என்னை உபசரித்தார்கள். எனக்கு பிடித்த தேனிர் தயாரித்துக் கொடுத்தார்கள்.

அதுவல்ல.. இலங்கையின் வடக்குப் பகுதியில் என்ன தான் நடக்கிறது?

இதைத் தான் நானும் ராஜபக்சேவிடம் கேட்டேன். உடனே அவர், என்னை ஒரு அறைக்குள் உட்கார வைத்து சிலைட் மூலம் வடக்குப் பகுதி மேப்பை போட்டு காட்டினார். அதில், நீங்கள் கூறும்படி மோசமான போர் எதுவும் நடக்கவில்லை.

சம அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதே?

அமைச்சரவையில் இப்போது எனக்கு அதிக அதிகாரம் அளித்திருப்பதால் பொறாமை கொண்டு சிலர் இதை கிளப்பியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிரதமர் பணிக்கு திரும்பியதும் எனக்குள்ள கூடுதல் அதிகாரம் பறிக்கப்படும். மீண்டும் எல்லா அமைச்சர்களும் சம அதிகாரங்களுடன் இருப்போம். போதுமா?

மன்னிக்கவும்.. ஈழத் தமிழர்களுக்கு சம அதிகாரம் அளிப்பது குறித்து...

ஓ.. அதைக் கேட்கிறீர்களா? இதற்கான முழு அதிகாரம் ராஜபக்சேவிடம் தான் இருக்கிறது. இதைக் கூறுவதற்கு மட்டுமே எனக்கு இப்போது உரிமை இருக்கிறது.

நீங்கள் பொறுப்பில்லாத வகையில் செயல்படுவதாகச் சிலர் கூறுகிறார்களே?

(கோபத்துடன்) யார் சொன்னது? நான் பொறுப்போடு தான் இருக்கிறேன். பிரதமர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரது இலாக்காக்கள் எனக்குத் தான் கூடுதல் 'பொறுப்பாக' கொடுக்கப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?

உங்கள் பயணத்தின் நோக்கமான 'போர் நிறுத்தம்' நடைபெறவில்லையே?

இன்னமும் குறைந்த எண்ணிகையில் மட்டுமே உள்ள புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டால், பிறகு அங்கு சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை. நிரந்தரமாக அமைதி ஏற்பட்டுவிடும். அதுவரை கொஞ்சம் பொறுமை காட்டித் தான் ஆக வேண்டும்.

இலங்கை பிரச்னையால் தமிழகத்தில் போராட்டம் வலுக்கிறதே?

இது உள்நாட்டு விவகாரம். அதற்கு அமைச்சர் சிதம்பரம் இருக்கிறார். இதுபற்றி நீங்கள் அவரிடம் கேளுங்கள்.

மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகினால்?

அப்போது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கபட்டிருக்கும் என்று பொருள். தமிழகத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபடி நான் இலங்கைக்கு போய் வந்து விட்டேன். இனிமேல், அவர்கள் கூக்குரல் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறிக் கொண்டே அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறுகிறார் பிரணாப் முகர்ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்