“அமெரிக்கர்களாகிய நாம் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டோம். அந்த மாற்றம் மிகச் சாதாரணமாக ஏற்பட்டுவிடாது, அதற்கு சில காலம் ஆகலாம். எனது இந்தப் பதவிக் காலம் கூட அதற்கு போதாமல் போகலாம். ஆனால் அந்த மாற்றத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். எனக்கு நீங்கள் அளித்துள்ள இந்த வெற்றி அதைத்தான் குறிக்கிறது. நாம் செய்து முடிப்போம்”.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி, முதல் கருப்பின அமெரிக்கர் ஒருவர் அந்நாட்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பை ஏற்கும் பெருமையையும் பெற்ற பராக் ஹூசேன் ஒபாமா, வெற்றி அறிவிப்பு வந்தப் பிறகு ஆற்றிய உரை அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
அந்தக் கணத்தில் உலகத்தின் கவனம் ஒரு மனிதனின் மீது பதிந்திருந்தது. அமெரிக்கர்கள் அவரது வெற்றியை ஒரு விடிவின் துவக்கமாகக் கருதினார்கள். ஆனால், உலகம் வேறொரு கோணத்தில் அந்த வெற்றியை வரவேற்றது. உலகம் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தையெல்லாம் விட மிக ஆழமானது.
ஒபாமாவின் வெற்றியைப் பாராட்டிய பல உலகத் தலைவர்கள் இது நாள் வரை அமெரிக்க எதிர்ப்பாளர்கள். தங்களின் நாட்டு நலன் அமெரிக்க சுய நலனிற்காக பலியிடப்படுகிறது என்று கூறி, ஆண்டாட்டுக் காலமாக எதிர்த்து வந்தவர்கள் அவர்கள். ஆயினும் ஒபாமாவை வாழ்த்தினார்கள், காரணம், அமெரிக்காவின் சர்வதேச அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதை இவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதுதான்.
சப் பிரைம் கிரைசிஸ் என்றழைக்கப்பட்ட (கடனைத் திருப்பிக் கட்டும் திறனைக் கொண்டவர்கள் அல்ல என்று தெரிந்தும் அதிக வட்டியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள்) வராக் கடன்களால் அமெரிக்க நாட்டு வங்கிகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நிதிச் சிக்கலும், கடன் அளிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு ஆளில்லாத காரணத்தால் அதில் முடங்கிய நிதியால் ஏற்பட்ட நெருக்கடியும், அதன் காரணமாக அந்நாட்டு பெரும் நிறுவனங்கள் பல திவாலானதாலும் கடும் பொருளாதாரப் பின்னடைவிற்கு அமெரிக்கா தள்ளப்பட்ட நிலையில், அந்நாட்டின் 44வது குடியரசுத் தலைவராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பராக் ஒபாமா பொறுப்பேற்கும் போது ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் உள்நாட்டு பொருளாதாரமும், அயல்நாட்டு உறவுகளும் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும்? இதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வியாகும், அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலக அளவில் பதில் தேடப்படும் கேள்வி இது.
“நிதி நெருக்கடி உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், ஒரு பலவீனமான பொருளாதாரத்தில் அமெரிக்கா உழலும் சூழலிலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளும் பலவீனமான பொருளாதாரத்தால் கடும் சோதனைக்குள்ளாகியுள்ள கட்டத்திலேயே ஒபாமா பதவி ஏற்கப் போகிறார்” என்று டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய தலைமைப் பண்பு மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச அரசியல் உறவுகள் தொடர்பான ஆய்வு வல்லுனர்களான கேரி சமோர், கார்ல் இண்டர்ஃபர்த், வாலி நாசர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
‘புஷ்-ஷிற்குப் பிறகு அமெரிக்கா’ என்ற தலைப்பில் உரையாற்றிய இவர்கள், உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளை பலவீனப்படுத்தி கட்டுப்போட்டுள்ள நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் சமூக, இன, அரசியல் எழுச்சிகளும் போராட்டங்களும் வலிமைபெறும் என்றும், அதனை சர்வதேச அளவில் கையாளும் வலிமையற்ற நிலையில் அமெரிக்கா இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆக இரண்டு முக்கிய சவால்கள் ஒபாமாவை (அமெரிக்காவை) எதிர்நோக்கியுள்ளன. ஒன்று, அமெரிக்காவையும் உள்ளடக்கிய உலகளாவிய பொருளாதார பின்னடைவை தடுத்து நிறுத்தி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வழிகாண்பது. இரண்டு, வியட்நாமிற்குப் பிறகு அமெரிக்காவின் புதைசேறாக ஆகியுள்ள ஈராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும் அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதும், இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் அமைதியிழந்து கிடக்கும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் அரசியல் முயற்சிகளை துவக்குவதுமாகும்.
சரிந்துக் கொண்டிருக்கும் பொருளாதாரம்!
வராக் கடன்களால் திவலான லீமேன் பிரதர்ஸ், அமெரிக்க வங்கி ஆகிய முதலீட்டு வங்கிகளும், ஏ.ஐ.ஜி. என்றழைக்கப்படும் அமெரிக்க இண்டர்நேஷனல் குரூப் எனும் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமும், வாஷிங்டன் மியூச்சுவல், ஃபிரெட்டி மாக், ஃபேன்னி மே போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களும் ஏற்படுத்திய நிதி நெருக்கடி
அந்நாட்டின் வங்கி அமைப்பில் ஏற்படுத்திய கடும் சரிவை மட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி (The Federal Bank) 700 பில்லியன் டாலர்களை (அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்) ஒதுக்கியது. ஆயினும் நிதிச் சந்தை நிமிரவில்லை. வீழ்ந்த வீட்டு மனைத் தொழில் மீண்டும் எழவில்லை. ஏனெனில் கடன் வாங்க ஆளுமில்லை, கடனளிக்க வங்கிகளில் நிதியுமில்லை.
இந்த நிலையில் மறைமுகமாக - சாதாரண கடன்கள் என்று கூறி மேலும் 2 டிரில்லியன் டாலர்களை அந்நாட்டு மைய வங்கி முதலீட்டு வங்கிகளுக்கு (கடன் வழங்குவதற்கு குறைந்த வட்டியில்) ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஏற்கனவே ஒதுக்கபட்டு அளித்த நிதியைப் போன்று மூன்று மடங்காகும். அப்படியிருந்தும் கடன் வாங்க யாருமில்லை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் யாருக்கும் துணிவுமில்லை.
அமெரிக்காவின் நாணயம் (டாலர்) மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. அதன் காரணமாக பணவீக்கம் பெரிதாக சரியாமல் கட்டுப்பாட்டில் நிற்கிறது. ஆனால் டிஃபிலேஷன் மிரட்டுவதாக ஒபாமா கூறியுள்ளார்.
வராக் கடன் உருவாக்கிய நிதி நெருக்கடி உருவாக்கிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து தப்பிக்க சிட்டி வங்கி (இதற்கு மட்டும் இதுவரை 45 பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது), போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரும் சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்திருப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவிற்கு வெடிக்கப் போகிறது.
இதனை எப்படிச் சமாளிக்கப் போகிறார் பராக் ஒபாமா?
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் உரையாற்றிய ஒபாமா, பெரும் நிறுவனங்களைக் காப்பாற்றுவதை விட, சாதாரண முதலீட்டாளர்களைக் காப்பதே தனது முன்னுரிமையாக இருக்கும் என்று கூறினார் (Saving Wall Street not at the cost of Main Street). இது அமெரிக்காவின் பொருளாதாரச் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்ட சிந்தனை.
அமெரிக்க நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதன் பொருளாதார நடவடிக்கைகள் எதுவாயினும் அது அந்நாட்டின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களின் (Mega Corporates) நலனிற்கு உகந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். கடந்த ஜூன் மாதம் வரை ஏறுமுகமாகவே இருந்த கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அந்நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில், கோனாக்கோ பிலிப்ஸ், ஷெல் ஆயில், ஷேவ்ரான், பீபீ ஆகிய 5 பெரும் முன்னனி நிறுவனங்கள் 3 வாரத்தில் மட்டும் 36 பில்லியன் டாலர்கள் (ரூ.1,51,200 கோடி) இலாபம் சம்பாதித்தன.
விலை ஏற்றத்தால் அமெரிக்க மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளான நிலையில், அது குறித்த ஆராய முற்பட்ட அமெரிக்க செனட்டின் நீதிக் குழு (Senate Judiciary committee), இப்படி கொள்ளை இலாபம் சம்பாதித்த நிறுவனங்களை அழைத்து விசாரணை நடத்தியது.
நீதிக் குழுவின் உறுப்பினராக இருந்த செனட்டர் ரிச்சர்ட் டர்பின், கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைய வணிக நடவடிக்கைகளால் உருவாகிவரும் பொருளாதார பின்னடைவு எந்த விதத்திலாவது உங்களுடைய மனசாட்சியை பாதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிபி அமெரிக்கா எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் மலோன், “உலக சந்தையை எங்களால் மாற்ற முடியாது. அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தேவை அதிகரிப்பிற்கேற்ப கச்சா மற்றும் மரபு சாரா எரிபொருள் உற்பத்தியை பெருக்கத் தவறியதே இன்றைய விலையேறத்திற்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.
“அமெரிக்க குடியரசுத் தலைவராக ஜார்ஜ் புஷ் பதவியேற்றதற்குப் பிறகு கச்சா விலை 400 விழுக்காடு அதிகரித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய செனட் நீதிக் குழுவின் தலைவர் பேட்ரிக் லீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய் விலை 55 முதல் 60 டாலர் அளவிற்குத்தானே உயர்ந்திருக்க வேண்டும், சரியாக இயங்கும் போட்டிச் சந்தையில் இந்த அளவிற்கு உயர என்ன காரணம்?” என்று கேட்டுள்ளார்.
இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான (ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்) ஆர்லென் ஸ்பெக்டர், “எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் கடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியன் டாலர்களில் இருந்து 40.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனம் ஒன்று இந்த அளவிற்கு லாபத்தை அடையும் போது பயனாளர்கள் இந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவதற்கான காரணம் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதற்றமடையாமல் பதிலளித்த எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள், எண்ணெய் இருப்பைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் காரணங்களைக் காட்டி தடுப்பதும், அதிகமான வரி விதிப்பும் விலையேற்றத்திற்கு மற்ற காரணங்கள் என்று கூறியுள்ளனர்.
ஷேவ்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ராபர்ட்சன், “எங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. மாறாக, இந்த அளவிற்கு லாபம் ஈட்டியதற்காக பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த விசாரணையின் முடிவில் இக்குழுவின் தலைவர் சொன்ன கருத்துக்கள்தான் மிக முக்கியமானவை, கவனிக்கத்தக்கவை.
“நாம் ஏற்றுக்கொண்டுள்ள நிர்வாக அமைப்பில் இவர்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. இவ்வளவுதான் நமது அமைப்பின் பலம் என்று உணர்ந்து இதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது” என்று நொந்து கூறியுள்ளார்.
அமெரிக்காவின் செனட் நீதிக் குழு, அந்நாட்டு நிர்வாகத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றுமாறு அரசிற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த அமைப்பினாலேயே, கச்சாவின் விலையை உயர்த்தி கண்ணிற்கு எதிரே பல பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்களை தடுக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம், அமெரிக்க கடைபிடித்து வரும் சுதந்திர வணிகக் (laissez faire) கொள்கையாகும். அதாவது வணிக நிறுவனங்களும், சந்தை சக்திகளும் எவ்வித தடையுமின்றி, தேவை - வரத்தின் (demand and supply) அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இலாபமோ, கொள்ளை இலாபமோ அல்லது நட்டமோ அது அவர்களைச் சார்ந்தது, மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியெல்லாம் அரசு கண்டுகொள்ளாது. சந்தைகளை முறைபடுத்த எந்தவிதமான முழு அதிகாரம் பெற்ற அமைப்பும் இல்லை. பொருட்கள் சந்தையை (Commodity Market) கட்டுப்படுத்தும் அமைப்பு கூட கச்சா விலையேற்றத்தின் போது ஊக வணிகர்கள் கொடுத்த விளக்கத்தைத்தான் கொடுத்தது என்பது கவனிக்கத்தக்கது.
இப்படி எந்தவித கட்டுப்பாடும் அற்ற முதலாளித்துவ கோட்பாட்டைத்தான் நமது பிரதமர் மன்மோகன் சிங், ‘கேசினோ கேப்பிடலிசம்’ அதாவது சூதாட்ட முதலாளித்துவம் என்று வர்ணித்தத்தோடு நில்லாமல், நிதிச் சந்தைகளை முறைபடுத்தக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
இதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் எதிர்த்தார். அமெரிக்கப் பொருளாதாரம் இந்த அளவிற்கு பின்னடைவைச் சந்தித்தப் பிறகும், அதனை முறைபடுத்தக் கூடிய, கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்ட ஆலோசனைகளை (ஜி20 மாநாட்டிற்கு முன்னர்) கடுமையாக எதிர்த்துப் பேசிய ஜார்ஜ் புஷ், இன்றைய பொருளாதாரப் பின்னடைவை சரிகட்டவும் அதுவே சிறந்த வழி என்று கூறியுள்ளார்.
இதுதான் புதிதாக பெறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா எதிர்கொள்ளப்போகும் பெரும் சவாலாகும். அமெரிக்கப் பொருளாதாரம் என்பது அந்நாட்டின் பெரும் வணிக நிறுவனங்களுடைய சந்தை ஆதிக்கத்தையும், சர்வதேச சாம்ராஜ்யத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கான, விரிவுபடுத்திக் கொள்வதற்கான ஒரு வடிவம் தான் என்பது அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் நிர்வாக வழிமுறையாக இருக்கிறது. இதனை ஒபாமா எப்படி உடைப்பார் என்பது ஒரு மிகப் பெரிய கேள்வியாகும்.
தடையற்ற தனியார் மயக் கொள்கை நடைமுறையில் உள்ள அமெரிக்காவில் சமூக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்த முடியாது.
ஆனால் இதனை மாற்றுவதற்கான (சாதகமான) சூழலை பொருளாதார பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருக்காவிட்டால் அந்நாட்டில் இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டுவரும் நடைமுறைகளை மாற்றுவதற்கு அந்நாட்டு மக்கள் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, மாற்றத்திற்கான ஒரு சாத்தியத்தை அங்கு உருவாக்கியுள்ளது.
ஆனால் இந்த மாற்றத்தை அவர் அமெரிக்காவோடு, அதன் உள்நாட்டு பொருளாதாரத்தோடு நிறுத்திக் கொள்ள இயலாது. அமெரிக்காவின் இராஜ தந்திர, பொருளாதார கூட்டாளிகளாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் இணைந்து அந்த மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதிலுள்ள சிக்கல் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் வாஷிங்டனில் கூடிய ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலகளாவிய பொருளாதார பின்னடைவை தடுத்து நிறுத்தும் யுக்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் கூட்டு நடவடிக்கை தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பாக மூன்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. அவைகள்: 1. அனைத்து நாடுகளின் நலனையும் உள்ளடக்கிய பன்னாட்டு நிதி அமைப்பு; 2. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல், மாறாக உறுதி செய்வதாக அது இருத்தல் வேண்டும்; 3. தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளும் நிதி, வணிக மனப்போக்குகள் தலைதூக்காமல் தவிர்த்தல் ஆகியன இந்தியா முன்மொழிந்த போகும் வழிமுறைகளாகும்.
ஆனால் இதற்கு பெரும் வரவேற்பில்லை. பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் மிக உன்னிப்பாக கவனித்தனர் என்று கூறபட்டதே தவிர, அவர் முன்வைத்த யோசனைகளுக்கு நடைமுறை வடிவம் கொடுப்பதில் முனைப்பு காட்டப்படவில்லை.
உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் உலகளாவிய வர்த்தக-பொருளாதார கட்டமைப்பில் (பர்மா போன்ற சில நாடுகளைத் தவிர) அனைத்து நாடுகளும் கட்டுண்டுள்ள நிலையில், அமெரிக்காவிலும், அதனோடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்கொண்டுவரும் பொருளாதாரப் பின்னடைவை இந்திய உள்ளிட்ட வளரும் நாடுகளையும் பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.
இதனைத் தடுக்க பன்னாட்டு அளவிலான திட்டம் வகுக்குப்படாத நிலையில் ஒவ்வொரு நாடும் தனித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நமது நாட்டில் மத்திய அரசும், இந்திய மைய வங்கியும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இந்தப் பின்னடைவின் பாதிப்பிலிருந்து நம்மை எந்த அளவிற்கு தடுத்து நிறுத்தும் என்பதை அறிவதற்கு முன்னர், அந்தப் பாதிப்பு எப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை முதலில் பார்ப்போம்.