சென்னை பல்கலைக் கழகத்தின் அரையாண்டுத் தேர்வுகள் தற்பொழுது நடந்து வருகிறது. இத்தேர்வில் பதில் எழுத அளிக்கப்படும் காகிதத்தின் தரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
32 பக்கங்கள் கொண்ட பதில் தாள்களை இணைத்து தேர்வு எழுத மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. பழுப்பு நிறத்தில் உள்ள அந்தக் காகிதத்தில் கோடு போட்டுள்ளது என்றும், மிக மென்மையாக இருக்கும் அந்தக் காகிதத்தில் ஒரு பக்கம் எழுதியிருப்பது மறுபக்கத்தில் தெரிவதால், மறுபக்கத்திலும் தாங்கள் எழுதினால் அதனை திருத்துபவர் எவ்வாறு தெளிவாக படித்து புரிந்துகொள்வார் என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு பதில் காகிதத்தில் ஒரு பக்கம் மட்டுமே எழுதிவிட்டு மறுபக்கத்தை அப்படியே விட்டுவிடவும் முடியாத நிலை மாணவர்களுக்கு. ஏனென்றால் மொத்தமாக அளிக்கப்பட்டுள்ள இந்த 32 பக்கங்களுக்கு மேல் கூடுதலாக (Additional Answer Sheets) காகிதங்கள் அளிக்கப்பட மாட்டாது.
இந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களை தாங்கள் கற்கும் கல்வியில் உள்ள சிரமங்களையும் தாண்டி மற்றொரு சோதனையாக இந்தத் தேர்வு உள்ளது என்று வருத்தத்துடன் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
150 ஆண்டுகளைக் கடந்த பெருமை மிக்க சென்னை பல்கலைக் கழகத்திலா இதெல்லாம் நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டு நாம் மாணவர்களைக் கேட்டால் வேறு பல குற்றச்சாற்றுகளை தெரிவிக்கிறார்கள்.
தேர்வுத் தாள்களைத் திருத்துவதில் பெரிய அளவிற்கு முறைகேடுகள் நடப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, மறு மதிப்பீடு செய்யுமாறு கோரி (ஒரு தாளிற்கு ரூ.800) பணம் கட்டிய பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
மதிப்பெண் பட்டியலை (Mark Sheets) வழங்குதல், தேர்வு அனுமதிச் சீட்டு (Hall Ticket) அளிப்பது ஆகியவற்றில் எல்லாம் எவ்வித முறையுமின்றி நடப்பதாக மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
நமது நாட்டிலுள்ள மற்ற எந்த பல்கலையுடன் ஒப்பிடுகையில் சென்னை பல்கலையின் கல்வி, நிர்வாகத் திறன் ஆகியவை வருத்தமளிப்பதாக உள்ளதெனவும் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் சென்னை பல்கலையில் பெற்ற பட்டத்திற்கு பெரும் மதிப்பு இருந்தது. இன்று சென்னை பல்கலை மாணவர்களின் மனதில் இடம்பெறாத பல்கலைகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
முக்கியப் பிரமுகர்களுக்கு பட்டங்களையும், விருதுகளையும் வழங்கி கெளரவிப்பதாலும், தங்க, பவழ விழாக்களை கொண்டாடுவதாலும் ஒரு பல்கலை பெருமை பெற்றுவிடாது.
அப்படியெல்லாம் மட்டுமே நடந்திருந்தால் இந்த அளவிற்கு பெருமை பெற்ற பல்கலையாக சென்னை பல்கலை உயர்ந்திருக்காது.
மாறாக, அது கல்லூரிக் கல்வியை எந்த அளவிற்கு தரத்துடன் வழங்க வழிவகை செய்துள்ளது என்பதே அதன் பெருமையை நிலைநிறுத்தும்.
தமிழக அரசில் இன்று பள்ளிக் கல்விக்குத் தனியாக அமைச்சரும், உயர் கல்விக்கு தனியாக அமைச்சரும் உள்ளனர். இதில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சென்னை பல்கலையின் தரத்தையும், அதன் நிர்வாகத் திறனை முறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவது அவசியம், அத்யாவசியம்.