நமது நாட்டில் விளையாட்டு நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இந்திய ஹாக்கியை மேம்படுத்த சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ரிக் சார்ஸ்வொர்த்தின் பதவி விலகல் கடிதம் அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது.
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலிய ஹாக்கி அணிக்காக விளையாடியபோது உலக அளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்த ரிக் சார்ஸ்வொர்த்தை, ஒரு நேரத்தில் ஹாக்கி விளையாட்டில் உலக அளவில் கொடிகட்டிப் பறந்த இந்திய ஹாக்கியை மீண்டும் தூக்கி நிறுத்த, தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்தது சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு.
இந்திய ஹாக்கியை தனது தான்தோன்றித்தனமான செயல்பாட்டால் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்துவந்த கே.பி.எஸ். கில் தலைமையிலான இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, ரிக் சார்ஸ்வொர்த்தின் நியமனத்தை ஏற்காதது மட்டுமின்றி, அவரை உதாசீனப்படுத்தவும் தலைப்பட்டது. ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டிகளுக்கு சிலி சென்ற இந்திய அணியுடன் ரிக் சார்ஸ்வொர்த் அனுப்பப்பட்டிருக்கவேண்டும், ஆனால் தவிர்த்தது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு. இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
நல்ல வேளையாக, கேடிலும் ஒரு நன்மையாக, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதிக் குமரன்
webdunia photo
FILE
கையூட்டுப்பெற்ற விவகாரம் வெடித்ததால் இந்திய ஹாக்கி காப்பாற்றப்பட்டது. முன்னாள் ஹாக்கி வீரர்களைக் கொண்ட தற்காலிக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எல்லாம் சரியாக சென்றுக் கொண்டிருக்கிறது என்ற நிலையில்தான் திடீரென்று ரிக் சார்ஸ்வொர்த்தின் பதவி விலகல் எனும் அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.
ரிக் சார்ஸ்வொர்த் தனது பதவி விலகலுக்கு கூறியுள்ள காரணங்கள், நமது நாட்டின் விளையாட்டுத் துறை நிர்வாகம் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது.
“நான் தங்குவதற்கு உரிய இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லாத நிலையிலும், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு
webdunia photo
FILE
எந்த நோக்கத்திற்காக என்னை நியமித்ததோ அந்த ஒப்பந்த நோக்கங்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றியுள்ளேன். எனக்கு தேச பயிற்சியாளர் என்று (அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத) பொறுப்பை அளித்தார்கள், ஆனால் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பொறுப்பில் தொடர்வது அர்த்தமற்றது” என்று இந்திய விளையாட்டு ஆணையத்திற்கும், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கும் அனுப்பியுள்ள தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரிக் சார்ஸ்வொர்த்.
எப்படிப்பட்ட அவலம் இது. பொறுப்பை அளித்துவிட்டு அதற்குரிய வசதிகளைத் தரவில்லையெனில் எப்படி செயல்பட முடியும்?
இந்திய ஹாக்கி நிர்வாகத்தைப் பற்றிக் கூறியுள்ள ரிக் சார்ஸ்வொர்த், “ஒவ்வொரு ஏற்பாடும் தாறுமாறாக உள்ளது, இப்பொழுதுள்ள இந்த அமைப்பு எதிர்பார்ப்பிற்கேற்றபடி செயல்படும் திறனற்றதாக உள்ளது. இதுகுறித்தெல்லாம் நான் அனுப்பியுள்ள மின் அஞ்சல்களே போதுமான சாட்சியாகும்” என்று இந்திய விளையாட்டு நிர்வாக அமைப்புகளைச் சாடியுள்ளார்.
“இந்தியாவில் ஒரு கடினமான சூழ்நிலையில்தான் பணியாற்றிட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்தே வந்தேன். ஆனால் இவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கென்று ஒரு கணினி இல்லை, ஒரு செல்பேசியைக் கூட அளிக்கவில்லை. திட்டமிடுவதற்கோ, பயணத்தை ஏற்பாடு செய்வதற்கோ கூட ஒரு திறம்பட்ட அமைப்பில்லை. எனது சொந்த பணத்திலிருந்தே செலவு செய்து வருகிறேன், அதனைச் செலுத்துமாறு பலமுறை கூறிவிட்டேன், நடக்கவில்லை. எனது குடும்பத்தைவிட்டு மிக விலகி இப்படிப்பட்ட
webdunia photo
FILE
சூழலில் பணியாற்றுவது பயனற்றது” என்று அக்கடிதத்தில் நொந்து நூலாகி எழுதியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லிற்கும் அனுப்பி வைத்துள்ளார் ரிக்.
நமது நாட்டின் தேச விளையாட்டான ஹாக்கி, இப்படிப்பட்ட மிக மிக மட்டமான அளவிற்கு நிர்வாகத்தை கொண்டிருக்குமானால் எப்படி நம்மால் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியும்? எப்படி விளையாட்டுத் திறனை உயர்த்த முடியும்?
நமது அண்டை நாடான சீனா விளையாட்டு மேம்பாட்டை
webdunia photo
FILE
மாபெரும் தேச திட்டமாக தீட்டி நிறைவேற்றி வருகிறது. அதற்கு அப்பாலுள்ள சிறிய நாடான ஜப்பான், விளையாட்டு மேம்பாட்டிற்கு அதிகபட்ச ஆதரவைத் தருகிறது. ஐரோப்பாவிலுள்ள மிகச் சிறிய நாடுகளெல்லாம் கூட சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றன.
மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்கா இன்று உலக அளவில் மிகச் சிறந்த தடகள வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது நாட்டில் விளையாட்டிற்கென்று தேச அளவிலும், மாநில அளவிலும் செயல்பட்டுவரும் அமைப்புகள் இன்றைய தேவையை, உலக அளவில் ஏற்பட்டுவரும் மேம்பாட்டை சற்றும் கருத்தில்கொள்ளாமல் பொறுப்பின்றி செயல்பட்டுவருகின்றன என்பதையே ரிக் சார்ஸ்வொர்த்தின் கடிதம் சாட்டையடியாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
எவ்வளவு பெரிய நாடு இது! அதற்கு இவ்வளவு பெரிய அவமானமா? சர்வதேச கூட்டமைப்பு
webdunia photo
FILE
தானாக முன்வந்து நமது ஹாக்கியை மேம்படுத்த ஒரு சிறந்த பயிற்சியாளரை அனுப்பி வைத்தும் அவரை முறையாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அமைப்பாகவல்லவா நமது ஹாக்கி மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புகள் உள்ளன. எவ்வளவு பெரிய அவலம் இது!
அரசுகளே... மத்திய, மாநில அரசுகளே... ஒன்று பொறுப்புடன் செயல்பட்டு விளையாட்டு நிர்வாகத்தை முறைபடுத்தி விளையாட்டுத் திறனை மேம்படுத்துங்கள். முடியவில்லையா... விளையாட்டு அமைப்புக்களை கலைத்துவிடுங்கள். இந்த நாட்டிற்கு மேலும் தலைக் குனிவு ஏற்பட வழிவகுக்காதீர்கள்.