அணு சக்தி ஒப்பந்தம்: இடதுசாரிகளின் கேள்விகளும் அரசின் நிலை (தடு)மாற்றமும்!
புதன், 9 ஜூலை 2008 (19:47 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி
PIB Photo
PIB
முகமையுடன் செய்யப்படவுள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தை (Safeguard Agreement) இறுதி செய்வதற்கு முன்னர் அதன் விவரங்களை வெளியிட முடியாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது, இப்பிரச்சனையில் மத்திய அரசு நெருக்குதலான விவரங்களை மறைக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
மத்திய அரசிற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக முடிவெடுத்த மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தங்களுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து எழுதிய கடிதத்தில் சில குறிப்பிட்ட சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பியிருந்தனர். அதற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய கடமையுள்ள மத்திய அரசு, இவ்வாறு பதிலளித்துள்ளது.
இடதுசாரிகள் எழுப்பியுள்ள கேள்விகள் இதுதான் :
1) இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள இந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை குறுகிய காலத்தில் தன்னிச்சையாக அமெரிக்கா முறித்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளதா? ஏனென்றால், நமது தாராபூர் அணு உலைக்கு எரிபொருள் அளிக்கும் 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தை 1983ஆம் ஆண்டு திடீரென்று (10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே) அமெரிக்கா முறித்துக்கொண்டது. அதன் காரணமாக அந்த அணு உலையை இயக்குவதில் (எரிபொருள் கிட்டாமையால்) சிக்கல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான மாற்று நடவடிக்கை என்ன?
2) இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் நமது நாட்டின் அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்துக்கொள்ள இந்தியாவிற்கு அமெரிக்க உதவிடும் என்று 123 ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டுள்ளதா? ஏனெனில், பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம் கண்காணிப்பு தொடர்பானதாக மட்டுமே இருக்கும் என்றும், யுரேனியம் எரிபொருள் கிடைப்பதை அது உறுதி செய்யாது என்றும் கூறப்படுகிறதே? இதில் உண்மையென்ன?
3) இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின்படி, பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் நமது நாட்டின் அணு மின் உலைகளுக்கு யுரேனியம் வழங்குவதை அணு சக்தி தொழில் நுட்ப வணிகக் குழு (Nuclear Supplier’s Group) நிறுத்திவிட்டால், சர்வதேச கண்காணிப்பின் கீழ் உள்ள அணு உலைகளை அதன் கட்டுப்பாட்டில் இருந்து திரும்பப்பெற முடியுமா?
4) அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் மற்ற நாடுகளிடமிருந்து நாம் வாங்கி நிறுவிப் பயன்படுத்தும் அணு மின் உலைகளுக்கு எரிபொருள் வழங்குவதை அ.தொ.கு. நிறுத்தினால், அந்த அணு உலைகளை கண்காணிப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியுமா?
5) பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் அணு மின் உலைகளுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கவேண்டும் என்ற உறுதியை அ.தொ.கு. நாடுகள் மீறனால், அதனால் உருவாகும் எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய எப்படிபட்ட நடவடிக்கை உறுதி மொழியை (corrective measure) இந்தியா பெற்றுள்ளது?
இந்தக் கேள்விகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிபடுத்தப்பட வேண்டியவை. ஆனால் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்யப்படவுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு ரகசியமானதாகக் கருதப்படவேண்டிய ஒரு ஆவணம்” என்றும், “அதனை மூன்றாவது நபரிடம் (அரசிற்கு அப்பாற்பட்ட அமைப்புக்களுடன் - அதாவது ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் கட்சிகளுடன் கூட) பகிர்ந்துகொள்ள இயலாது” என்றும் கூறியுள்ளார்!
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்டது என்ன என்பதை ஐ.மு.- இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்பான ஆவணங்களைப் பார்க்க வேண்டுமெனில் அதற்கு ‘நீங்கள் மத்திய அமைச்சரவையின் அங்கமாகவேண்டும்’ என்று இடதுசாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் பிரணாப் முகர்ஜி தனது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எப்படி சுழற்றிவிடுகிறார் அயலுறவு அமைச்சர் என்று பாருங்கள்.
நமது கேள்வியெல்லாம், இது சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமே (Civil Nuclear Energy Cooperation Agreement) என்றால், இந்த கண்காணிப்பு ஒப்பந்தம் எப்படி ரகசிய (privileged document) ஆவணம் ஆகும்?
சரி, இந்தப் பதிலை ஏன் இப்பொழுது சொல்ல வேண்டும்? இதனை என்றைக்கோ கூறியிருந்தால் இந்த வேடிக்கை வினோதங்களை நமது மக்கள் என்றோ புரிந்துக்கொண்டிருப்பார்களே?
PTI Photo
PTI
அதுமட்டுமல்ல, அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தின் பார்வைக்குக் கொண்டுவருவோம் என்று பிரதமர் பேசினாரே? அதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று மத்திய அரசும், காங்கிரஸ் கட்சி நினைக்கின்றனவா?
அணு ஆயுத சோதனை நிறுத்தம் தொடர்பாக தங்களது ஆட்சியில் அமெரிக்காவுடன் பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயக கூட்டணி அரசு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதுபோல நாங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமல் எதையும் செய்ய மாட்டோம் என்று கூறினாரே பிரதமர் மன்மோகன் சிங், அந்த வார்த்தையெல்லாம் வெற்றுக் காற்றுதானா?
அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், அது பயன்படுத்தும் சொற்களும் மக்கள் மத்தியில் நிலவிவரும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நமது நாட்டின் இறையாண்மைத் தொடர்பான எதையோ இந்த அரசு அடகு வைத்துவிட்டே இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றப்போகிறது என்றே கருதத் தோன்றுகிறது.
நாட்டின் நலன் என்று கூறிக்கொண்டு இந்த அரசு எதைச் சாதிக்க முற்படுகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.