எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை குறுகிய எதிர்காலத்தில் - உதாரணத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு - ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பதற்கு (வாங்குவதற்கு) உற்பத்தியாளரிடமோ அல்லது மொத்த விற்பனையாளரிடமோ இன்றே ஒப்பந்தம் செய்து கொள்ளும் வணிகத்திற்கு பெயர் முன்பேர வர்த்தகம் (Futures Trading) என்பதாகும்.
இந்த ஒப்பந்தக் காகிதத்தை வைத்து ஒரு வித வணிகம் உலகம் முழுவதும் நடக்கிறது. பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கு பத்திரத்தை எப்படி வாங்கி விற்று லாபம் பார்க்கின்றனரோ அதேபோல, இந்த முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தையும் வணிகமாக்குகின்றனர்.
உதாரணத்திற்கு எண்ணெய் சந்தையில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கப்பட்ட ஒப்பந்தத்தை அதன் விலையேறும்போது கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தக் காகிதத்தை வாங்குபவர் மேலும் விலையேறினால் கூடுதல் விலைக்கு விற்கலாம். விலை குறைந்தால் நட்டம் ஏற்படும்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்தவரை, இந்த முன்பேர வர்த்தகம் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், அமெரிக்காவில் சப் பிரைம் மார்ட்கேஜ் என்று கூறப்பட்ட கடன் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக வீடு மற்றும் மனை விற்பனைத் தொழில் பாதிக்கப்பட்டதால், அந்தத் தொழிலில் இருந்த முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் முன்பேர வணிகத்தில் முதலீடு செய்தனர்.
இவர்கள்தான் உலகத்தின் தேவைக்கேற்ற அளவிற்கு கச்சா உற்பத்தி இல்லை என்று கூறி, ஒரு செயற்கையான தட்டுப்பாட்டை சந்தையில் உருவாக்கினர். அதன் விளைவாக கடந்த இரண்டாண்டிற்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது.
இவர்களோடு, கச்சா விலையேற்ற நிலவரத்தை வைத்து சூதாடும் கோஷ்டிகளும் இணைய நாளுக்கு நாள் கச்சா விலை செயற்கையாக உயர்த்தப்பட்டு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட முன்பேர வர்த்தகத்தில் உருவாக்கப்படும் ஏற்றங்கள் - நீர்க் குமிழிகளைப் போல - ஒரு நாள் திடீரென்று வெடித்து வீழ்ச்சியைச் சந்திக்கும். ஆனால் அப்படி ஏற்படாமல் உலகளாவிய அளவில் - எண்ணெய் உற்பத்தி நாடுகளின் (கொள்ளை லாபம் கிடைக்கிறதே) மறைமுக ஒப்புதலுடன் - இன்றுவரை தொடர்கிறது.