இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்!

சனி, 3 மே 2008 (13:31 IST)
“800 மில்லியன் (80 கோடி) இந்திய மக்கள் அதனை (இராமர் பாலத்தை) கட்டியது இராமர்தான் என்று நம்புகிறார்கள். கடவுளான இராமர் இருந்தாரா அல்லது அவர்தான் அந்த பாலத்தைக் கட்டினாரா என்ற பிரச்சனைக்குள் நீதிமன்றம் நுழைய முடியுமா?

webdunia photoFILE
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையில், தண்டி மடாதிபதி வித்யானந்த பாரதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் எழுப்பியுள்ள கேள்வி இது.

தனது வாதத்திற்கு ஆதரவாக (ஆதாரமாக) மற்றொரு கேள்வியையும் வழக்கறிஞர் வேணுகோபால் எழுப்பியுள்ளார்: “இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள், அவைகளை நீதிமன்றங்களோ அல்லது அரசுகளோ விசாரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை துவக்கும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அப்பொழுதெல்லாம் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று எந்தக் குரலும் கொடுக்காமல், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒரு செயற்கைக் கோள் படத்தை வெளியிட்டவுடன் “இதுதான் இராமர் கட்டிய பாலம்” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள், அதனை நிரூபிக்க ஆதாரமேதும் இல்லையென்பது தெளிவானவுடன் நம்பிக்கையை கையிலெடுத்துள்ளது மட்டுமின்றி, அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சட்டத்தை மிரட்டும் அளவிற்கு இறங்கியுள்ளதையே இந்த வாதங்களும் கேள்விகளும் உணர்த்துகின்றன.

சேது சமுத்திர கால்வாய் பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலமே என்றும், அது புராதன காலத்தில் கட்டப்பட்டது என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ள வழக்கறிஞர் வேணுகோபால், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இராமர் பாலத்தை மெய்பிக்க வாதிட்டிருந்தால் அது சட்டப் பூர்வமான வாதமாக இருந்திருக்கும். ஆனால், அந்த ஆதாரத்தைச் சார்ந்து நின்று வாத்த்தை எடுத்துரைக்காமல், நம்பிக்கையை பிரச்சனையாக்கி, அதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று வாதிடுவது, “தெய்வத்தின் பேரால் நாங்கள் செல்வதுதான் சட்டம், வழங்குவதுதான் தீர்ப்ப” என்கின்ற புராதன மத ஆட்சிக் காலத்தையே நினைவூட்டுகிறது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமியும் இதேபோல், “இராமர் பாலம் என்பது 80 கோடி மக்களின் நம்பிக்கை” என்றுதான் வாதிடுகிறார்.

சுப்பிரமணியம் சுவாமி வாதிடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் அரசியல்வாதி. எப்படி வேண்டுமானாலும் பேச "உரிமை" உள்ளவர். ஆனால் மூத்த வழக்கறிஞரும், அரசமைப்பு சட்ட நிபுணர் என்று அறியப்படுபவருமான வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களும் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டு வாதிட்டிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

அது இருக்கட்டும், 80 கோடி மக்களின் கருத்தை இவர்கள் எப்பொழுது கேட்டறிந்தார்கள்? 80 கோடி மக்களின் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? இந்திய நாட்டின் 80 கோடி மக்கள் அது இராமர் பாலம்தான் என்று நம்பிக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்களே, அப்படியானால், நாசா செயற்கைக் கோள் புகைப்படத்தை வெளியிடும்வரை அம்மக்களின் நம்பிக்கையை இவர்கள் அறியாமல் இருந்ததேன்?

webdunia photoFILE
சேது சமுத்திர கால்வாய் திட்டப்பகுதியில் இருக்கும் நிலத் திட்டுகள் இராமர் பாலம் என்று அறுதியிட்டுக் கூறுவதற்கு ஆதாரமேதுமில்லை என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்ததால்தான், நம்பிக்கையை இவர்கள் கையிலெடுத்துள்ளனர். அந்த வாதம் எந்த அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஏசு கிறிஸ்து இந்த இடத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவ மக்கள் நம்பும் இடத்தைப்பற்றி நீதிமன்றம் விசாரணை நடத்த முடியுமா என்று ஒரு கேள்வியை எழுப்புயுள்ளார் வழக்கறிஞர் வேணுகோபால். இந்தியாவிற்குள் நிறைவேற்றப்படவுள்ள ஒரு திட்டத்தை முடக்க, நமது நாட்டிற்கு சம்மந்தப்படாத ஒரு நாட்டிலுள்ள, வேறொரு மதத்தின் புனித தலத்தை கேள்விக்குட்படுத்தி தங்கள் வாதத்திற்கு நியாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.

இராமர் மீதும், இராமாயணம் மீதும் இந்திய மக்கள் கொண்டுள்ள பக்தியும் பற்றுதலும் (Faith), இவர்கள் கூறும் நம்பிக்கை எனும் சாதாரண அடிப்படையை விட அர்த்தமுள்ளவை, பலமானவை ஆகும். ஸ்ரீ இராம அவதாரத்தின் ஆன்மிக நோக்கத்தை இராமாயணம் மூலம் அறிந்தவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள். சோதனையிலும் தன்னிலையிழக்காமல் அவர் காட்டிய அளவற்ற பொறுமையை பெருமைக்கு‌ரிய உதாரணமாக இன்றளவும் மக்கள் ஏற்றுப் போற்றுகின்றனர்.

அதே நேரத்தில் தாங்கள் வணங்கும் தெய்வத்தை அரசியலாக்கும் முயற்சிகளை அறியாதவர்கள் அல்லர் நம் மக்கள். அதனால்தான், இராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று கூறி பாபர் மசூதியை இடித்த மதவாத அரசியலை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். அப்படிப்பட்ட சக்திகள்தான் இன்றைக்கு இராமர் பாலம் பிரச்சனையை எழுப்புகிறது என்றும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்திய மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே ஆனாலும், அவர்கள் மற்ற மதங்கள் கூறும் கடவுள்கள் மீதும், நம்பிக்கைகளின் மீதும் மதிப்பு வைப்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு பண்பாட்டு அடிப்படையை இந்த நாடு இன்று நேற்றல்ல, தொன்றுதொட்டு போற்றி வருகிறது.

இந்திய நாட்டின் ஆன்மிகமே அதன் பண்பாட்டிற்கும், வாழ்க்கைக்கும் பலமான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று ‘இந்திய பண்பாட்டின் அடித்தளங்கள்’ என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மிக ஆழமாக எழுதியுள்ளார். இப்படிப்பட்ட ஆன்மிக முன்னோடிகளின் வழிகாட்டுதல்களே நமது மக்களை காலம் காலமாக பண்படுத்தி வந்துள்ளது.

மகான்களின் தெய்வீக பண்பைக் கண்டு, அவர்கள்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் ஞான உபதேசத்தால் செம்மைபடுத்தப்பட்டவர்கள் நம் மக்கள். அந்த மகான்கள் எந்த மத்த்தைச் சார்ந்தவர்கள் என்று வேற்றுமைபடுத்திப் பார்த்து புறகணித்தவர்கள் அல்ல நமது மக்கள்.

அதனால்தான் இராமரின் பெயரால் மற்றொரு மதத்தின் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டதை அவர்கள் ஏற்காமல் புறக்கணித்தார்கள்.

எனவே, இராமரின் பெயரால் மற்றொரு அரசியல் முயற்சி அரங்கேற்றப்படுவதை அவர்கள் அறியாதவர்களல்ல.