தமிழர்களின் தலையாய பண்டிகையான பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது சட்டத்தைக் கருவியாக்கி தமிழர் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அத்துமீறல் ஆகும்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோது, பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்புடனும், போட்டியாளர்கள் முறையான கட்டுப்பாட்டுடனும் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை ஏற்ற நீதிமன்றம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்ஞால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற முதன்மை அமர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு விதித்த இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ள மறுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை, தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளை தாங்கள் வணங்கும் குல தெய்வத்திற்கு செலுத்தும் நன்றியாக கருதி அதில் ஈடுபட்டுவரும் தென் தமிழ்நாட்டு மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை உருவாகும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமாகவும், வீர மரபின் வெளிப்பாடாகவும் கருதும் ஒரு விளையாட்டைப் பற்றி தெரிவித்துள்ள “கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவை
தமிழக மக்களின் கோபத்திற்குக் காரணம், தங்களது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், பண்பாட்டின் அங்கமாகவும், அடையாளமாகவும் கருதி தாங்கள் உளப்பூர்வமாக ஈடுபட்டுவரும் வீர விளையாட்டை “காட்டுமிராண்டித்தனமானது, நாகரீகமற்றது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் விமர்சித்திருப்பதே.
பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல்!
இந்திய நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அமர்ந்திருக்கும் ஒருவர், தமிழர்களின் பாரம்பரியமாகவும், வீர மரபின் வெளிப்பாடாகவும் கருதும் ஒரு விளையாட்டைப் பற்றி தெரிவித்துள்ள “கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவை என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடக்கூடியது அல்ல. ஏனென்றால், தமிழக அரசின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியர்ஜூனா, ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த விளையாட்டின் மீதுள்ள பற்றுணர்வையும் எடுத்துக் கூறியுள்ளார். அதனைக் கேட்டுக்கொண்ட பின்னர்தான் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
இப்படி விமர்சிப்பதற்கு அவருக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை. இது சட்டம் சார்ந்த பிரச்சனையல்ல, மாறாக தமிழரின் பண்பாட்டைத் தழுவியது. அவ்வாறு எடுத்துக் கூறப்பட்ட பின்னரும் அதனை உணராமல் கோப உணர்ச்சிக்கு ஆட்பட்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றால், தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்புணர்வை தலைமை நீதிபதி இழந்துவிட்டார் என்பதையே அவரின் நடத்தைப் புலப்படுத்துகிறது.
காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவா?
webdunia photo
WD
ஜல்லிக்கட்டு விளையாட்டை காட்டுமிராண்டித்தனமானது, நாகரீகமற்றது என்று கூறிய பிறகு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீக்க முடியாது என்பதற்கு அவர் கூறிய காரணங்கள் விவாதத்திற்குரியவையாகும்.
“இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமாக, நாகரீகமற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த அனுமதிக்க முடியாது. விலங்குகள் பற்றியும் நாம் சற்றுக் கவலைப்படவேண்டும். காளைகளைத் தூண்டி, அவைகளை கூட்டத்திற்குள் கட்டவிழ்த்துவிட்டு, அதன்மீது பலர் பாயந்து பிடிப்பது என்பது விளையாட்டு உணர்வு முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதையே காட்டுகிறது. விலங்குகளும், மனிதர்களும் இப்படிபட்ட வதைகளுக்கு உட்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மனிதர்களுக்கும், காளைகளுக்கும் இடையே எந்த சண்டையும் வேண்டாம்” என்று நீதிமன்ற அமர்வின் சார்பாக தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சு ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றிய அவரது அறியாமையை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, ஏதோ ஜீவ காருண்ய சமயத்தைச் சேர்ந்தவரின் குரலாகத்தான் தெரிகிறதே தவிர, நீதியின் குரலாகத் தெரியவில்லை.
காளைகள் கூட்டத்திற்குள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவர் கூறியுள்ள குற்றச்சாற்று பழைய கதையாகும். பார்வையாளர்கள் பகுதி முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, போதுமான தடுப்புகள் நிறுவப்பட்டு முழுப் பாதுகாப்புடனேயே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதில் எந்தப் பார்வையாளருக்கும் காயமேற்படவில்லை.
அதேபோல, நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கிணங்க காளைகளைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு தனி அடையாளமும், எண்ணும், மேல்சட்டையும் அளிக்கப்பட்டது. சில போட்டியாளர்கள் காயமுற்றனரே தவிர, ஒருவரும் சாகவில்லை.
காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறுகிறார். ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் அதற்கென்றே வளர்க்கப்படுபவை. காளையை அடக்க முற்படும் இளைஞர்களை விட பன்மடங்கு பலம் கொண்டவை. 10 பேர் சேர்ந்தாலும் கிட்டத்தில் நெருங்கி தொட்டு அடக்க முடியாத பலம் கொண்டவை. அவைகளை அடக்குவதில் ஈடுபடுபவர்களுக்குத்தான் காயமேற்படுமே தவிர, காளைகளுக்கு காயம் ஏற்பட்டதாகவோ, கால் உடைந்து போனதாகவோ அல்லது செத்ததாகவோ இதுவரை வரலாறில்லை. எனவே காளைகள் துன்புறுத்தப்படுவதாக தலைமை நீதிபதி கூறியிருப்பது அவருடைய அறியாமையையே காட்டுகிறது.
webdunia photo
WD
விலங்குகள் துன்புறுத்தப்பட அனுமதிக்க முடியாது என்று கூறுகிறாரே நீதிபதி, மாடுகளைக் கட்டி சேறடிப்பது, எரு அடிப்பது, உழுவது, மூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியில் கட்டி இழுக்கச்செய்வது ஆகியனவெல்லாம் கூட இவரின் கருத்துப்படி துன்புறுத்தல்தானே? விலங்கின நல வாரியம் நாளை மேலும் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தால், மாடு கட்டி ஏர் உழுவது கூட விலங்குகளை வதைப்பது என்று தடை செய்யுமா உச்ச நீதிமன்றம்?
விலங்கினங்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்று வந்த பொது நல மனுவை ஏற்று விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நடத்தப்படுகிறதே, அவற்றில் செய்யப்படும் சாகச செயல்களில் ஈடுபடுத்தப்படும் விலங்கினங்கள் அனைத்தும் “வதைக்கப்படுகின்றன” என்பதை அறியாதவர்களா? என்றைக்காவது விலங்கின நல வாரியங்கள் இதற்காக பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனவா?
ஒருவருக்குக் கூட காயம் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தமிழக காவல் துறைத் தலைவர் உறுதியளிப்பாரா? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு நமது கேள்வி இதுதான்: இப்படி ஒரு கட்டுப்பாட்டை எல்லா விளையாட்டுகளுக்கும் விதிக்க உச்ச நீதிமன்றம் தயாரா? ஒருவருக்குக் கூட காயம் ஏற்படாமல் கபடி போட்டி கூட நடத்த முடியாதே. அதிகமான காப்புகளை அணிந்து கொண்டு விளையாடப்படும் கிரிக்கெட்டில் கூட காயம் படுகிறதே. சராசரி மனிதர்களுக்குத் தெரிந்த இந்த விவரமெல்லாம் கூட...
விலங்கின நல அமைப்பின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகளுக்கு மது ஊட்டப்பட்டும், அவைகளின் கண்களில் மிளகாய் பொடி தூவியும் ஆக்ரோஷமூட்டுகிறார்கள். இவையாவும் துன்புறுத்தலே என்று வாதாட அதனை ஏற்றுக் கொண்டுள்ளது நீதிமன்றம்.
விளையாட்டுக்களில் இப்படிப்பட்ட சில மீறல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. அவைகளை முறையான நடவடிக்கைகள் மூலம் அகற்ற வேண்டுமே தவிர, விளையாட்டிற்கே தடை போட்டுவிடுவதா? தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு போட்டியில் ஈடுபட்ட வீரர்கள் மீது விளையாடுவதற்கு தடை போடப்படுகிறதே தவிர, விளையாட்டிற்கு தடை போடப்படவில்லை.
குதிரைப் பந்தயம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அது ஒடும் குதிரைகள் யாவும் கன்றிலிருந்தே நன்கு வளர்க்கப்பட்டவைதான். ஆயினும், பந்தயத்திற்கு முன்னர் அவைகளுக்கு ரம் ஊட்டப்படுவது அனைவரும் அறிந்த விவரமாக உள்ளது. இது உறுதி செய்யப்பட்டால், அதற்காக குதிரை பந்தயத்திற்கே உச்ச நீதிமன்றம் தடை விதித்து விடுமா? குதிரைப் பந்தயத்தில் ஈடுபடுத்தப்படும் குதிரைகள் இவர்களின் கூற்றுப்படி துன்புறுத்தப்படுவதில்லையா? விலங்குகள் நல அமைப்புகள் இதுவரை அதனை கண்டுகொண்டதுண்டா?
ஏன் சராசரி மக்களின் பழக்க வழக்கங்களில் மட்டும் இப்படி தீவிரம் காட்டப்படுகிறது? இதையெல்லாம் நீதிமன்றங்கள் கருத்தில் கொள்வதில்லையே ஏன்? புரியவில்லை.
எனவே நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சட்ட ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் நியாயமாகப்படவில்லை.
உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும்!
webdunia photo
WD
உச்ச நீதிமன்றம் அளித்திருப்பது இடைக்காலத் தடை நீடிப்பே. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுள்ளது. இம்மனுவை உச்ச நீதிமன்றம் கவனமாக பரிசீலித்து தனது உத்தரவை மாற்றியளிக்கும் என்று எதிர்பார்போம்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்பாக நடத்துமாறு மாநில அரசிடமிருந்து உறுதிபெற்று அதனைத் தொடரச் செய்யவேண்டும். அதுவே சரியான ஒரே வழியாகும்.