தமிழரின் வாழ்விலும், வரலாற்றிலும் பிரிக்க முடியாத பண்பாட்டு அங்கமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. மஞ்சு விரட்டு என்றும் அழைக்கப்படும் இந்த மைந்து விரட்டு (மைந்து = வலிமை) பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இருந்துவருகிறது.
ஒரு காலத்தில் காளையை அடக்குபவனுக்கு மாலை சூடி மணாளனாக ஏற்கும் முறை தமிழ்நாட்டில் வழமையாயிருந்துள்ளது. தன்னை விட பலம் கொண்ட காளையை வெறும் முரட்டுத் தனத்தால் அடக்கிட முடியாது. காளை அடக்குவது ஒரு கலை. தமிழரின் பல்வேறு போர்க் கலைகளில் ஒன்று. சீரிப்பாய்ந்து வரும் காளை நேராகச் செல்வது போல் சென்று, மின்னல் வேகத்தில் பக்கவாட்டிற்கு வந்து அதன் கூர் சீவப்பட்ட (அதில் எண்ணையை வேறு தடவியிருப்பார்கள்) கொம்பையோ அல்லது திமிலையோ கெட்டியாகப் பற்றிக் கொண்டு, காளையின் போக்கிற்கு அயராமல் ஈடுகொடுத்து அடக்கவோ அல்லது அதன் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசையோ பரித்து வரவேண்டும். இதுவே ஜல்லிக்கட்டு.
உயிரைப் பணயம் வைத்து இப்படிப்பட்ட விளையாட்டில் ஈடுபடவேண்டுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வீரம் என்பது நியாயத்திற்கு வேலியாக நிற்கும் துணிச்சலே தவிர வேறில்லை. அப்படி நிற்கும் போது ஆயுதத்திற்க்கோ, தன்னை விட மேலான பலத்தையோ கண்டு பின் வாங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போர்கலைகளை கற்றல் ஒரு இளைஞனின் வாழ்வில் இன்றியமையாத்தாகிறது.
ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, அடிமுறை, குத்து வரிசை, சிலம்பாட்டம், வாள் வீச்சு, புரவியாட்டம் என்பதெல்லாமும், அதையும் தாண்டி எந்த வயதிலும் எத்தனைப் பேர் வந்தாலும் எதிர்கொள்ளும் திறமையை, திராணியைத்தரும் வர்மக் கலையும் போர்க் கலைதான். இவையாவும் தமிழர் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாகும்.
மேலும் இப்படிப்பட்ட போர்ப் பயிற்சியின்றி, வெறும் ஏட்டுக் கல்வியைக் கற்று சம்பாதனை வாழ்க்கைக்குத் தேர்ச்சி பெறுபவன் சாதாரண மிரட்டலுக்கு அஞ்சுபவனாகவும், பசு மாட்டைக் கண்டாலும் மிரள்பவனாகவும், இரத்தத்தைக் கண்டால் மயங்கி விழுபவனாகவும், சமூக சிந்தனை, கூட்டு மனப்பான்மை அற்றவனாகவுமே இருப்பதைக் காணலாம். இதெல்லாம் ஏதோ முரட்டு விளையாட்டு என்று விவரம் தெரியாமல் பிதற்றிக் கொண்டிருப்பவர்களின் பிரதிபலிப்புத்தான் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த பொது நல வழக்காகும்.
இந்த வழக்கைப் போட்டவர்கள் விலங்குகளின் நலனைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டவர்களைப் போல் காட்டிக் கொள்பவர்களதானே தவிர, உண்மையான சமூக அக்கரை கொண்டவர்களல்ல. மனிதக் கழிவு சாக்கடையில் அடைத்துக் கொண்டால் அதனை நீக்குவதற்கு இன்றைக்கும் மனிதன் இறங்கி வேலை செய்யவேண்டிய அவலம் நிலவுகிறது. அதனை உடனடியாக நிறுத்தி உரிய கருவிகளை (இறக்குமதி செய்தாவது) பயன்படுத்தி அதில் ஈடுபடும் மனிதர்களை மீட்டு அவர்களுக்கு மாற்று வாழ்வு ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததால் அதனை பாராட்டலாம்.
ஆனால், நமது நாட்டின் நிலையென்ன? மனிதக் கழிவை அள்ளுவது தெய்வக் காரியம், அதனை செய்பவர்கள நேரடியாக சொர்கத்தை அடைவார்கள் என்று குஜராத் முதலமைச்சர் கூறுகிறார். இவரால் எப்படி இவ்வளவு துணிச்சலாக பேச முடிகிறது? கோத்ரா ரயில் எரிப்பை காரணமாக்கி குஜராத்தில் ஒரு ரணகளத்தை ஏற்படுத்திய இவரை இன்று வரை சட்டம் நெருங்கவில்லையல்லவா? அதுதான் அவருக்குத் துணிச்சலைத் தருகிறது. இன்று வரை அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. விலங்கினங்களின் நலனைக் காக்கப் புறப்பட்ட நீதிமன்றம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
நீதிமன்றத் தீவிரச் செயல்பாடு என்பது நீதித் துறையை எதேச்சதிகாரத்திற்கு கொண்டு சென்றுவிட்டதோ?