குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடும் அவினாசி அத்திக்கடவு நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு, கோவை மாவட்டங்களில் வறட்சிப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது. இவ்விரு மாவட்டங்களிலும் பெய்யும் மழையளவு மற்ற மாவட்டங்களை விடக் குறைவு.
தமிழகத்தின் சராசரி மழை அளவு 950 மி.மீ. கோவை, ஈரோடு மாவட்டங்களின் சராசரி 750 மி.மீ. மழையளவு பதிவாகிறது. நாளுக்கு நாள் தண்ணீர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குடிநீருக்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் பயனற்றுக் கிடக்கின்றன.
நிலத்தடி நீர் வளம் காக்க ஏற்படுத்தியுள்ள குளங்களும், குட்டைகளுக்கும் போதிய மழை நீரின்றி வறண்டு கிடக்கின்றன. குடிநீருக்காக அதிக ஆழத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதால் அதிகம் மின்சாரம் செலவாகிறது. கிராம பஞ்சாயத்துகளும் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடனில் தத்தளிக்கின்றன.
இப்பகுதியில் நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்க மேல்பவானித் திட்டம், குந்தா கழிவு நீர்த்திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் பேசப்பட்டாலும், நிறைவேற்றப்படவில்லை. தென்னக நதிகள் இணைக்கப்பட்டாலும், பாண்டியாறு புன்னம்புழா திட்டம் நிறைவேற்றினாலும், இப்பகுதியில் ஆயிரம் முதல் ஆயிரத்து 400 அடிவரை மேடான பகுதியாக இருப்பதால் மேற்படி திட்டங்களால் பயனில்லை.
இப்பகுதிக்கு பயனளிக்க கூடிய ஒரே திட்டம் அவினாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டம் மட்டுமே. பவானி ஆற்றில் உபரி நீரை பில்லுர் அணைக்கு மேலே ஆயிரத்து 400 அடி அளவில் தண்ணீரைத் திருப்பி மேட்டுப்பாளையம், அவினாசி, கோபி, திருப்பூர். பவானிசாகர், பெருந்துறை, காங்கேயம் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளிலுள்ள 85 குளங்கள், 300 குட்டைகளில் நிரப்பி நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதாகும்.
இதற்கு தேவை இரண்டு டி.எம்.சி. நீர் மட்டுமே. இதன் மூலம், ஏற்கனவே உள்ள பாசனங்களோ, குடிநீர் திட்டங்களோ பாதிக்காது. சென்ற 50 ஆண்டுகளில் 39 ஆண்டுகள் உபரி நீர் வீணாக கடலுக்குச் சென்றிருக்கிறது. 2007ம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை மட்டும் 14 டி.எம்.சி. நீர் கடலுக்குச் சென்றுள்ளது. 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லோக்சபா தேர்தல் அறிக்கையிலும், 2001 சட்டசபை தேர்தல் அறிக்கையிலும், 2006 சட்டசபை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும், தமிழக அரசின் 1998-1999 மற்றும் 2001-2002ம் ஆண்டுகளின் நிதி நிலை அறிக்கையிலும் அவினாசி அத்திக்கடவு திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கோவை மாவட்டம் அவினாசி சிறப்பு பஞ்சாயத்தில் 2006ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி நடந்த விழாவில், "நீண்ட நாள் கோரிக்கையான அவினாசி அத்திக்கடவு திட்டம் 1996ல் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டது. தி.மு.க., அரசால் கட்டாயம் நிறைவேற்றப்படும்' என உறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சியில் 2007 ஆகஸ்ட் 13ம் தேதி நடந்த நீர்ப்பாசனக் கருத்தரங்கிலும், ஈரோட்டில் 2007 அக்டோபர் 7ம் தேதி நடந்த நீர்ப்பாசனக் கருத்தரங்கிலும் பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவினாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். அவினாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்துக்காக தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழு சட்டசபை தொகுதிகள், மூன்று எம்.பி. தொகுதிகளிலுள்ள 15 லட்சம் மக்களின் நீண்ட கால கனவை நிறைவேற்ற வேண்டும். தேர்தலின் போது அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர், அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி இப்பகுதிகளில் பாலைவனமாவதைத் தடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.