அரிசி ஏற்றுமதி தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி, 23 மே 2008 (13:56 IST)
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. குலசேகரன் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு :
மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய அரசு பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
எங்கள் நிறுவனம் மலேசியாவுக்கு 4,300 டன் அரிசி ஏற்றுமதி செய்ய ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மத்திய அரசின் தடையால் எங்கள் நிறுவனத்தின் வர்த்தக நலன் பாதிக்கப்படுவதுடன், மலேசியாவுடனான ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை என்று வழக்கும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
மத்திய அரசு தடை விதிப்பதற்கு முன்பு செய்து கொண்ட ஏற்றுமதி ஒப்பந்தங்களின் அடிப்படையில் அரிசி ஏற்றுமதி செயய அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.குலசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், மத்திய அரசின் நிரந்தர வழக்கறிஞர் பி.சந்திரசேகரன் ஆகியோர் விசாரணையின் போது, ஏற்றுமதிக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் பெற்ற துறைக்கு, அதனை ரத்து செய்வதற்கும் அதிகாரம் உள்ளது.
உலக அளவில் நிலவும் சூழ்நிலைகளையும், உள்நாட்டின் அரிசியின் தேவையையும் கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை விதிக்கப்பட்ட பிறகும் கூட, சில ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அவர்களின் ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட காலம் வரை அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அரிசி ஏற்றுமதி செய்யும் அனுமதியை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வழங்கினால், இதை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்திய மக்களின் நலன், தேசிய உணவு கையிருப்பு நாட்டின் நலன் கருதிதான், ஏற்றுமதிக்கான தடை விதிக்கப்பட்டது. பொது விநியோக துறையில் பற்றாக்குறை ஏற்படாமல் அரிசி கிடைப்பதற்குத்தான் தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவு உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டது என்று கூறினார்கள்.
ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் இதே மாதிரியான வழக்கில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. குலசேகரன், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க் மறுத்து விட்டார். அத்துடன் இது தொடர்பான பதில் மனு தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு விசாரணையை கோடைக் கால விடுமுறை முடிந்த பிறகு விசாரிக்கவும் தள்ளி வைத்தார்.
இநத வழக்கு விசாரணையின் போது நீதிபதி குலசேகரன், ஒரே மாதிரியான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவும், ஆந்திர உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கும், வேறுபாடு இருப்பது ஆச்சரியாக இருக்கிறது.
ஒரே மாதிரியான வழக்கில் இரண்டு உயர்நீதி மன்றஙகளும், வேறுபட்ட நிலையை எடுத்துள்ளதை பற்றி குறிப்பிட்ட நீதிபதி குலசேகரன், உள்நாட்டு உணவு தாணிய தட்டுப்பாடு முக்கியமா? அல்லது ஏற்றுமதியாளரின் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது முக்கியாமா? என்று கேட்டார்.
மத்திய அரசு ஏப்ரல் 1 ந் தேதி அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உட்பட உணவு தாணியங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இதை எதிர்த்து பல வருடங்களாக உணவு தாணிய ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், பல நிறுவனங்கள் பல்வேறு நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன.