சிமெண்ட் விலை குறைப்பு!

வியாழன், 15 மே 2008 (16:08 IST)
சிமெண்ட் விலையை நேற்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் 50 கிலோ மூட்டைக்கு ரூ.3 முதல் ரூ.7.50 வரை குறைக்க சம்மதித்தனர்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் நேற்று சிமெண்ட் உற்பத்தியாளர் சங்க பிரதிநிகளை அழைத்து‌ப் பேசினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு, கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசின் முயற்சியால், சிமெண்ட் ஆலைகள் 50 கிலோ மூட்டைக்கு ரூ.3 முதல் ரூ.7.50 பைசா வரை விலையை குறைக்க சம்மதித்துள்ளன. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் விலை கடந்த ஒரு வருடத்தில் 2.2 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை குறைக்க, சிமெண்ட் ஆலைகள் விலையை குறைத்துள்ளன என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஹெச். எம். பங்கூர் கூறியதாவது, தற்போது குறைத்துள்ள விலையை, அடுத்த இரண்டு அல்ல்து மூன்று மாதங்கள் வரை உயர்த்த மாட்டோம். எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து, இந்த மாதத்திற்குள் சாதகமான பதிலை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.

உருக்கு, சிமெண்ட் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சென்ற வாரம் பிரதம்ர் மன்மோகன் சிங், உருக்கு ஆலை அதிபர்களையும், உயர் நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் அடிப்படையில் உருக்கு ஆலைகள் உருக்கு, இரும்பு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைக்க சம்மதித்தன.

இதே போல் சிமெண்ட் விலையை குறைக்கவும் அரசு முயற்சித்து வருவதாக மத்தியி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற வாரம் தெரிவித்தார். அத்துடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால், அரசு நிர்வாக ரீதியான நடவடிக்கையை எடுக்கும் என்று எச்சரித்து இருந்ததார்.

இந்நிலையில் சிமெண்ட் ஆலைகள் விலையை குறைக்க துவங்கியுள்ளன. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சிமெண்ட் ரகத்தை பொறுத்து 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.8 வரை குறைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு சிமெண்ட் இறக்குமதியாவதால், ஸ்ரீ சிமெண்ட் விற்பனையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, இதன் விலையை குறைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஏ.சி.சி சிமெண்ட், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை விலையை குறைக்க போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதன் மேலாண்மை இயக்குநர் சுமித் பானர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில், சிமெண்ட் உற்பத்தி செலவு 12 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிமெண்ட் விலையை குறைத்தால், நிறுவனத்தின் இலாபம் குறையும் என்று கூறியுள்ளார்.

சிமெண்ட் விலையை இதன் உற்பத்தி நிறுவனங்கள் குறைத்துள்ளது பற்றி நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிமெண்ட் சில்லரை விற்பனை விலையை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

அவரிடம் சிமெண்ட உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையான, உற்பத்தி வரியை குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா என்று கேட்டதற்கு, எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எனக்கு விலை குறைப்பு பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக வரவில்லை. தினசரி செய்தி தாள்களில் சிறிதளவு விலை குறைத்திருப்பது பற்றி வந்துள்ள செய்தியை படித்து தெரிந்து கொண்டேன். மேலும் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்