கயிறு பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு!

வியாழன், 8 மே 2008 (16:02 IST)
கயிற்றில் இருந்து தயாரித்த பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

தென்னை நாரில் இருந்து கயிறாக திரித்து தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்புகள், மண் அரிப்பை தடுக்கும் அமைப்பு, அலங்கார பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

இவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன் ஏற்றுமதி சென்ற நிதியாண்டில் (2007-08) 11.15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவிலஇருந்து ஏற்றுமதி செய்யப்படும் கயிறு பொருட்களில் அமெரிக்காவுக்கு 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு 41 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கயிறு பொருட்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், கனடா, ஜப்பான், கிரீஸ், சுவீடன், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு குடியரசு, போர்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சென்ற நிதி ஆண்டில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 566 டன் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 11.15 விழுக்காடு உயர்வு.

அதே நேரத்தில் ஏற்றுமதியின் அளவு அதிகரித்து இருந்தாலும், ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் ஏற்றுமதிக்காக கிடைத்த பணம் 2 விழுக்காடு குறைந்துள்ளது. ஏற்றுமதியின் மூலம் ரூ.592.88 கோடி கிடைத்துள்ளது.

இதற்கு காரணம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்ததே.

இது குறித்து கயிறு மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏ.சி.ஜோஸ் கூறுகையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது கயிறு தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் படி ரிசர்வ் வங்கியிடமும், மத்திய நிதி அமைச்சகத்திடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்