இரும்பு தாது சரக்கு கட்டணம் குறைப்பு!

வெள்ளி, 2 மே 2008 (20:10 IST)
இரும்பு தாது போக்குவரத்திற்கான சரக்கு கட்டணம் 5.8 விழுக்காடு குறைப்பதாக ரயில்வே அறிவித்தது.

உருக்கு, இரும்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே இரும்பு தாது மீதான சரக்கு கட்டணத்தை 5.8 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது.

உருக்கு ஆலைகளின் மூலப் பொருளான இரும்பு தாது சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உருக்கு ஆலைகளும், இரும்பு தாது சுரங்கங்களை வைத்திருக்கும் நிறுவனங்களும் கோரிக்கை விடுத்தன.

இதனை ஏற்றுக் கொண்டு ரயில்வே சரக்கு கட்டணத்தை குறைத்துள்ளது. இது குறித்து ரயில்வே போர்டு உறுப்பினர் (போக்குவரத்து) வி.என். மாத்தூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரயில்வே விதிக்கும் சரக்கு கட்டண பட்டியலில் இரும்பு தாது 180வது இனத்தில் இருந்து 170 இனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து கட்டணம் 5.8 விழுக்காடு குறையும்.

இந்த புதிய கட்டண விகிதம் மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இந்த புதிய கட்டணம் உள்நாட்டு உருக்கு ஆலைகளுக்கு இரும்பு தாது ஏற்றிச் செல்வதற்கு மட்டும் பொருந்தும். இரும்பு தாது ஏற்றுமதிக்கான போக்குவரத்திற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உருக்கு ஆலைகளும் கட்டணத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று மாத்தூர் கூறினார்.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் இரும்பு தாது ஏறறுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் இரும்பு தாது ஏற்றுமதிக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட வேண்டும். உருக்கு விலை உயர்வு பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே சென்ற நிதியாண்டில் (2007-08) ஏற்றுமதி செய்வதற்காக 535 லட்சத்து 90 ஆயிரம் டன் இரும்பு தாதுவை சரக்கு வேகன்கள் மூலமாக துறைமுகங்களுக்கு கொண்டு சென்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்