ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட வருடாந்திர கடன் கொள்கையில் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை மேலும் கால் விழுக்காடு அதிகரித்தது.
ஏற்கனவே கடந்த 18ஆம் தேதி வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்தது நினைவிருக்கலாம். ( வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் என்பது, பொதுமக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கும் வைப்பு நிதியில், குறிப்பிட்ட விழுக்காடு ரிசர்வ் வங்கியிடம் இருப்பாக வைக்க வேண்டும். இதற்கு ரிசர்வ் வங்கி எவ்வித வட்டியும் வழங்காது).
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி ( யான வேணுகோபால் ரெட்டி) மும்பையில், வங்கிகளின் தலைமை அதிகாரிகள் மத்தியில் வெளியிட்டார்.
இதில் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் கால் விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 விழுக்காட்டில் இருந்து 8.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மே 24 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.
வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் கால் விழுக்காடு உயர்த்தப்பட்டால், பணப்புழக்கம் 9,000 கோடி வரை குறையும்.
(கடந்த 17ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்தது. இது ஏப்ரல் 26 முதல் ஏழு விழுக்காட்டில் இருந்து 7.75 விழுக்காடாகவும், மே 10 முதல் 7.75 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டது).
வங்கிகளின் வட்டி விகிதம் முன்பு இருந்த அளவான 6 விழுக்காடகவே தொடரும். அதே போல் ரிபோ விகிதம் 7.75 விழுக்காடாகவும், ரிவர்ஸ் ரிபோ விகிதம் 6 விழுக்காடாக தொடரும். (ரிபோ விகிதம் என்பது வங்கிகள் தங்களிடம் உள்ள உபரி பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் வைப்பு நிதியாக வைக்கும் போது கொடுக்கப்படும் வட்டி. ரிவர்ஸ் ரிபோ என்பது வங்கிகள் தங்களின் தேவைக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி).
வருடாந்திர கடன் கொள்கையை அறிவித்து ரெட்டி பேசுகையில், விலை உயர்வை கட்டுப்படுத்துவதை முக்கியமான நோக்கமாக கொண்டு வட்டி விகிதம், பொருளாதார கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் விதத்தில் பொருளாதார கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பணப்புழக்கத்தை பரிசீலித்து வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் கால் விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.