உருக்கு ஆலைகள் கூட்டணி இல்லை- அமைச்சர்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (19:02 IST)
உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டதற்கான சான்று இல்லை. எனவே இதை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் தேவை ஏற்படவில்லை என்று உருக்குத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத், இன்று மக்களையில் எழுத்து பூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, சந்தையின் தேவையை பொறுத்தே உருக்கு விலை உள்ளது. சந்தையில் சரக்கு கிடைக்கும் அளவு, இதன் மொத்த தேவைகள், உலக நாடுகளில் விலை ஆகியவை பொருத்தே உருக்கு விலைகள் சந்தையில் உள்ளன. உருக்கு விலையை நிர்ணயிக்கும் விதத்தில் உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துள்ளதற்கான எவ்வித சான்றுகளும் உருக்கு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப் படவில்லை.

தற்சமயம் நாட்டில் உருக்கு விலையை நிர்ணயிக்க இதை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணையத்தை அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மத்திய அரசு உருக்கு விலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தேவை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உருக்கு தொழில் துறை அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. எனவே இதன் விலை சந்தையின் பல்வேறு காரணிகளை பொறுத்தே இருக்கும். உருக்கு விலைகள் சந்தையின் கிடைக்கும் அளவு, இதன் தேவை, இறக்குமதி செய்யப்படும் உருக்கின் விலை, உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை, உலக நாடுகளின் விலை ஆகியவற்றை பொருத்தே இருக்கும் என்று இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று மக்களவையில் பேசும் போது, சிமெண்ட் ஆலைகள், உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்து விலையை உயர்த்துகின்றன. இந்த போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது என எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்