உருக்கு விலை உயர்வு – இரும்புத் தாது காரணமல்ல!

புதன், 16 ஏப்ரல் 2008 (19:43 IST)
உருக்கு, இரும்புக் கம்பிகள், தகடு போன்றவைகளின் விலை அதிகரித்து வருகிறது. இவற்றின் விலைகளை பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் உட்பட தனியார் உருக்காலைகள் டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளன.

உருக்கு விலை உயர்வுக்கு காரணம், உருக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்களான இரும்புத் தாது, கோக் எனப்படும் உலைக் கரி விலை உயர்வும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்ததே என்று உருக்கு ஆலைகள் கூறுகின்றன.

இரும்புத் தாது ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், இவற்றின் ஏற்றுமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்று உருக்கு ஆலைகள் கூறிவருகின்றன. இது பற்றி பரிசீலிக்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக, மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உருக்கு, இரும்பு விலை உயர்வுக்கு காரணம் இரும்புத் தாது அல்ல என்று இந்திய கனிம தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த கூட்டமைப்பில், இரும்பு தாது உட்பட பல கனிமங்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

இது குறித்து இந்த கூட்டமைப்பு கூறியிருப்பதாவது:

உருக்கு விலை உயர்வுக்கும், அதைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பதற்கும் இரும்புத் தாது காரணம் அல்ல. இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் இரும்பு தாதுவே என்று உருக்கு ஆலைகள் குற்றம் சுமத்துகின்றன. இது உண்மையல்ல.

உருக்கு விலையில், இரும்பு தாதுவின் பங்கு மிக சிறியதே. இது பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணமல்ல. உருக்கு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும்.

இரும்புத் தாதுவுக்கு தட்டுப்பாடு இல்லை. சென்ற நிதி ஆண்டில் உள்நாட்டு உருக்கு ஆலைகளின் தேவையான 880 லட்சம் டன், ஏற்றுமதி செய்யப்பட்ட 930 லட்சம் போக உபரியாக இருப்பில் 700 லட்சம் டன் உள்ளது.

35 விழுக்காடு உருக்கு ஆலைகள் சொந்தமாக இரும்புத் தாது மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களை வைத்துள்ளன.

25 விழுக்காடு உருக்கு ஆலை நிறுவனங்கள், இரும்புத் தாது வெட்டி எடுக்கும் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இரும்பு தாதுவை பெறுகின்றன. இவை அவ்வப்போது சந்தை விலைக்கு வாங்குவதில்லை.

உருக்கு உற்பத்தி செலவில், சொந்தமாக இரும்பு தாது சுரங்கங்கள் வைத்துள்ள உருக்கு ஆலைகளுக்கு, இரும்பு தாதுவின் பங்கு 2 விழுக்காடாக உள்ளது..

இரும்பு தாது வர்த்தகர்களிடம் இதை வாங்கும் உருக்கு ஆலைகளுக்கு, உருக்கு உற்பத்தி செலவில் இரும்பு தாதுவின் பங்கு 11 முதல் 12 விழுக்காடுவரை உள்ளது.

இந்தியாவின் அதிகரித்து வரும் வளர்ச்சியால், உற்பத்தியைவிட உருக்கு, இரும்பு பொருட்களின் தேவை அதிக அளவு உள்ளது.
சொந்தமாக இரும்பு தாது சுரங்கங்களை வைத்துள்ள உருக்கு ஆலைகள் 40 விழுக்காடு வரை இலாபம் சம்பாதிக்கின்றன.

சொந்தமாக இரும்பு தாது சுரங்கங்களை வைத்துள்ள உருக்கு ஆலைகள் அல்லது நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் இரும்பு தாது பெறும் உருக்கு ஆலைகள், உற்பத்தி .செலவு குறையும் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உருக்கு விலைக்கு சமமாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுவில் 70 முதல் 72 விழுக்காடு வரை மிக சிறிய துகள்களாக உள்ளன.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இரும்பு தாதுவில் 84 விழுக்காடு இந்த வகையே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதை உடனே பயன்படுத்த வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனில் சுற்றுச் சூழல் பாதிககப்படும்.

இந்த ரக இரும்புத் தாதுவை உள்நாட்டு உருக்கு ஆலைகள் வாங்குவதில்லை. எனவே இவற்றை ஏற்றுமதி செய்ய வேணடிய தேவை ஏற்படுகிறது.

இரும்புத் தாது உற்பத்தியை குறைத்தால், இரண்டாம் நிலையில் உள்ள உருக்கு ஆலைகள் மூலப் பொருள் கிடைக்காமல் பாதிக்கப்படும். உருக்கு ஆலைகளில் 59 விழுக்காடு இந்த இரண்டாம் நிலை உருக்கு ஆலைகளாகவே உள்ளது.

எனவே இரும்புத் தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்கவோ, அல்லது ஏற்றுமதி வரி விதிக்கவோ தேவையில்லை.

அத்துடன் இரும்புத் தாது மீதான ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும். இரும்பு சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுவிற்கு விதிக்கப்படும் உரிமை தொகையை (ராயல்டி) 10 மடங்காக உயர்த்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

உள்நாட்டில் உருக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, ஏற்றுமதி செய்யப்படும் எல்லா வகை உருக்கு ரகங்கள் மீது 25 விழுக்காடு ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். ரயில்வே சரக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று இந்திய கனிம தொழில் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த கோரிக்கை மனுவை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்