வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.96/39.97 என்ற அளவில் இருந்தது. நேற்றய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 39.97/39.98
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இந்திய பங்குச் சந்தையில் ஒரே மாதிரி இல்லாமல் அடிக்கடி மாற்றமாக உள்ளது.
பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய துவங்கினால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிக அளவு இருக்கும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
மற்ற நாடுகளில் அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முதன் முறையாக அமெரிக்க ரிசர்வ் வங்கி கவர்னர் பென் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி அளவு அதிகரிக்கவில்லை. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்காது என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியமும் உலக அளவில் உற்பத்தி 3.7 விழுக்காடாக இருக்கும் என அறிவித்தது. இது முன்பு 4.1 விழுக்காடாக இருக்கும் என்று கணித்திருந்தது.
இதனால் அந்நிய செலவாணி சந்தைகளில் பல்வேறு நாட்டு நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது.
இதன் விளைவாக முதலீட்டாளர்களின் ஆர்வம் பண்டக சந்தைக்கு திரும்பியது. முன்பேர சந்தையில் தங்கத்தின் விலையும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்தன.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவதால், முதலீடு நிறுவனங்கள் ஆசியா உட்பட மற்ற நாட்டு பங்குச் சந்தைகளுக்கு திரும்புகின்றது.