உருக்கு இற‌க்கு‌மதி வரி நீக்க வேண்டும்!

சனி, 29 மார்ச் 2008 (13:09 IST)
உருக்கு விலை அதிகரித்து வருவதால், இதற்கு இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

உருக்கு, இரும்பு உட்பட தொழில், கட்டுமான துறைக்கு தேவையான பல்வேறு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று முன்தினம் உருக்கு பொருட்களுக்கான ஏற்றுமதி வரி சலுகையை ரத்து செய்தது.

இந்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது,உருக்கு விலை ஏற்றத்தை தடுக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இதன் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த 52 வாரங்களாக இல்லாத அளவு, மார்ச் 15 ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 6.68 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உருக்கு, இரும்பு பொருட்களின் விலை அதிகரித்ததும், உணவுப் பொருட்களின் விலை உயர்வும் தான்.

உள்நாட்டில் உருக்கு, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வெள்ளிக் கிழமை பாசுமதி அல்லாத அரிசி, உருக்கு உட்பட 40 வகை பொருட்களுக்கு ஏற்றுமதி வரிச் சலுகையை ரத்து செய்தது.

அத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிக்க கணக்கிடப்படும் அடிப்படை விலையை டன்னுக்கு ஆயிரம் டாலராக அதிகரித்தது.

சென்ற வாரம் சமையல் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ததுடன், இறக்குமதி செய்யப்படு்ம் சமையல் எண்ணெய்க்கு, இறக்குமதி வரி விதிக்க கணக்கிடப்படும் அடிப்படை விலையையும் குறைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்