பாமாயில் வரி குறைப்பை திரும்பப்பெற வேண்டும் - கேரள முதல்வர்!
சனி, 22 மார்ச் 2008 (12:24 IST)
இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இறக்குமதி வரி குறைத்திருப்பதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை வெள்ளிக்கிழமை குறைத்தது.
இதன் படி சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி வரி 52.5 விழுக்காட்டில் இருந்து 27.5 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
இதே போல் மத்திய அரடசு சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் உட்பட பல்வேறு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை குறைத்தது. அத்துடன் சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்ததது.
இந்நிலையில் பாமாயில் இறக்குமதி வரி குறைப்பை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், கேரள முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மத்திய அரசு பாமாயில், இதர சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை 45 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக குறைத்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி வரி 52.5 விழுக்காட்டில் இருந்து 27.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் உள்ள தென்னை விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு தென்னை விவசாயிகள் மீது மீண்டும் மீண்டும் சுமையை ஏற்றுகின்றது.
ஐந்தாவது முறையாக பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாமாயில் மீதான இறக்குமதி வரி 99.4 விழுக்காடாக இருந்தது. இதன் மீதான இறக்குமதி வரி தொடர்ந்து குறைக்கப்படுகிறது.
எல்லா வகை சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைத்திருப்பதுடன், தேங்காய் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது அநியாயமானது.
கேரளாவில் தேங்காய் எண்ணெய்க்கு பற்றாக்குறை இல்லை. இந்த மாநிலத்தில் இருந்து அந்நிய நாடுகளில் வாழும் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்காகதான் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பது, இதன் உள்நாட்டு சந்தையை பாதிப்பதுடன், அந்நிய நாடுகளில் வாழும் கேரளாவைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கும்.
மத்திய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக பெருமை அடித்து கொள்கின்றது. அதே நேரத்தில் தாராள மயமாக்கல் கொள்கையால் விவசாயிகளை நிரந்தரமாக கடன் சுமையில் தள்ளுகிறது.
இதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரும் எதிர்க்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.