ஏ.டி.எம்.இல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் திட்டத்தை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வரவேற்றுள்ளது!
வங்கிகள் தற்போது தங்கள் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் அதன் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் (ஏ.டி.எம்.) பணம் எடுத்தால் கட்டணம் வசூலித்து வருகின்றன. இவை எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் பல்வேறு விதமாக உள்ளன. சில வங்கிகள் ஒரு முறை ஏ.டி.எம்.இல் பணம் எடுப்பதற்கு ரூ.57 கூட கட்டணமாக வசூலிக்கின்றன.
இவ்வாறு கட்டணம் வசூலிக்காமல், எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், எல்லா ஏ.டி.எம்.களிலும் இலவசமாக பணம் எடுப்பதற்கும் அல்லது ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. இதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஆவணத்தை ரிசரிவ் வங்கி எல்லா வங்கிகளின் கருத்துக்களைக் கேட்டு சுற்றுக்கு விட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இதில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மற்றொரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும். அடுத்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வங்கிகள் கணக்கில் உள்ள இருப்பை கேட்டால் கட்டணம் வசூலிப்பதை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
ரிச்ர்வ் வங்கியின் இந்த ஆலோசனையை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வரவேற்றுள்ளது. இது குறித்து இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் சேர்மனும், செயல் இயக்குநருமான எஸ்.ஏ.பட் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“எல்லா தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களிலும் (ஏ.டி.எம்.) பணம் எடுக்கலாம் என்ற ரிசர்வ் வங்கியின் திட்டம் அமலாக்கினால், எங்கள் வங்கியின் வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எங்கள் வங்கிக்கு கேஷ்ட்ரி திட்டத்தின் கீழ் 350 ஏ.டி.எம்.கள் உள்ளன. இத்துடன் எங்கள் வாடிக்கையாளர்கள் 6 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம்.
எங்கள் வங்கி பாரத ஸ்டேட் வங்கியுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின்படி, எங்கள் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் 8,000 ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம்” எனறு கூறினார்.