புது டெல்லியில் 9 வது சர்வதேச வாகன வர்த்தக காண்காட்சி ஜனவரி 10ந் தேதி தொடங்குகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ. ) புது டெல்லியில் ஒவ்வொரு வருடமும் சர்வதேச வாகன வர்த்தக கண்காட்சியை நடத்துகிறது. இதில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் பங்கேற்பார்கள். இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாது, அந்நிய நாட்டு நிறுவனங்களும் பங்கேற்கும். இந்த கண்காட்சி வருகின்ற ஜனவரி 10 ந் தேதி தொடங்கி, 15 ந் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சி பற்றி இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) உற்பத்தி பிரிவு இணை தலைவர் பி.எஸ்.ராஜாமணி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஆறு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் 1,900 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள் அவை உற்பத்தி செய்யும் உதிரி பாகங்களை கண்காட்சியில் வைக்கின்றன.
இந்த கண்காட்சியில் வாகனங்களுக்கு தேவைப்படும் பல்வேறு உதிரி பாகங்களுக்கு ஒவ்வொரு பிரிவாக தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு உள் அலங்காரத்திற்கு தேவைப்படும் பொருட்கள், வாகனங்களை எரிவாயுவை பயன்படுத்தி ஓட்டுவதற்காக தேவைப்படும் கருவிகள் உட்பட பல்வேறு வகையான சிறப்பு அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
இந்த வாகன வர்த்தக கண்காட்சிக்கு பத்து லட்சத்துக்கும் அதிமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இதில் கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மலேசியா, ஸ்பெயின், தைவான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்கின்றன என்று கூறினார்.
புது டெல்லியில் நடக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ஒவ்வொரு வருடமும் பல இந்திய நிறுவனங்கள் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும். இந்த ஆண்டு ஹோன்டா, டி.வி.எஸ். ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏற்கனவே புதிய இரண்டு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன. இத்துடன் பல நிறுவனங்கள் நவீன உதிரி பாகங்களையும், வாகன பாதுகாப்பு, உள் அலங்காரம் உட்பட பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளன.